நபிகள் நாயகம் முஹம்மத் ﷺ

முஹம்மத்

நபிகள் நாயகம் முஹம்மத் ﷺ

பெயர் : முகம்மத் இப்னு அப்துல்லா
பிறப்பு : கி.பி 570 மக்கா (இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்பு : கி.பி 632 (வயது 63) மதீனா, சவூதி அரேபியா
நினைவிடம் : அல்-மஸ்ஜித் அந்-நபவி, மதீனா, சவூதி அரேபியா
மற்ற பெயர்கள் : அபுல்-காசிம், அஹ்மத்,
இனம் : அரபு
சமயம் : இஸ்லாம்
தந்தை: அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தாலிப்
தாய்: அமீனா பிந்த் வஹ்ப்
வாழ்க்கைத் துணை மனைவிகள்:
கதீஜா (595–619) சவுதா பிந்த் சமா (619–632) ஆயிஷா பிந்த் அபி பக்ர் (619–632) அப்சா ப்ந்த் உமர் (624–632) சாய்னாப் பிந்த் குசைமா (625–627) இந்த் பிந்த் அபி உமைய்யா (629–632) சானாப் பிந்த் ஜாஷ் (627–632) ஜுவாரியா பிந்த் அல்-ஹரித் (628–632) ரமியா பிந்த் அபி சுஃபியான் (628–632) ரைஹானா பிந்த் சாய்த் (629–631) சஃபியா பிந்த் ஹுயாய் (629–632) மைமுனா பிந்த் அல்-ஹரித் (630–632) மரியா அல்-கிப்தியா (630–632)

பிள்ளைகள் :
மகன்(கள்) : அல்-காசிம், அப்துல்லா, இப்ராகிம்
மகள்கள் : சைனப், ருக்கய்யா, உம் குல்த்தூம், பாத்திமா சஹ்ரா

இஸ்லாத்திக் இறுதி நபியான நபி (ﷺ) அவர்கள் தனது வாழ்நாளில் ஒரு இராஜதந்திரி, வணிகர், தத்துவஞானி, சொற்பொழிவாளர், சட்டமன்ற, சீர்திருத்தவாதி, சிப்பாய் மற்றும் தளபதியாகவும் இருந்தார்.

இவ்வுலகில் ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட மக்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை வேறெங்கும் காணக் கிடைக்காது.

ஆனால் முஹம்மத் நபி (ﷺ) அவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமூகம் அவரது போதனைகள், கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள், அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துல்லியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது.

முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் அரேபியாவில் உள்ள மக்காவில் ரபீ அல் அவ்வல் (கி.பி 570) திங்கட்கிழமை மக்காவின் ஆளும் குலமான குறைஷிகளின் பணி ஹாஷிம் குலத்தில் பிறந்தார்கள். அவரது தாயார் சஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த வஹ்ப் இப்னு அப்துல் மனாஃப்பின் மகள் ஆமினா ஆவார். நபி (ﷺ) அவர்களின் தந்தை அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ் ஆவார். இவரது வம்சாவளி இப்றாகிம் நபியின் மகனான இஸ்மாயீல் அவர்களின் நாற்பதாவது வம்சாவளியாகும்.

நபி (ﷺ) அவர்களின் தந்தை நபியவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். அவருக்கு ஆறு வயதாகும் முன்னரே அவரது தாயாரும் இறந்துவிட்டார். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் வளர்ந்து வந்தார். அப்துல் முத்தலிப் அவரை மிகவும் கனிவுடன் கவனித்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டனார் அப்துல் முத்தலிபின் இறப்பை தொடர்ந்து நபி (ﷺ) அவர்களின் சிறிய தந்தையான அபூதாலிப் அவர்கள் நபியவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

முஹம்மது (ﷺ) அவர்கள் மக்கா நகரத்திற்கு வெளியே பாலைவனத்தில் ஹலீமா பின்த் அபி துஐப் என்ற செவிலித் தாயாரின் குடும்பத்துடன் வளர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் மக்களுடன் இரண்டறக்கலந்து சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் பங்கேற்று வாழ்ந்தவரகள். தனிமையை விட்டும் ஒதுங்கியவர்கள். அவரது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தது.

அவரது சிரிப்பு புன்னகையாக இருக்கும், பேசும் போது அடுத்தவர்கள் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளியிட்டு தெளிவாக பேசுவார்கள், அவசியமில்லாமல் எதனையும் பேசமாட்டார்கள். அனைவருடனும் அன்போடு பேசுவார்கள், அறையிலிருக்கும் கன்னியரை விட அதிகமாக வெட்கப்படுவார்கள்.

அன்பளிப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள், தமக்கு கிடைக்கும் பொருள் அற்பமானதாக இருந்தாலும் பெரிதாக மதிப்பார்கள், தர்மமாக வழங்கும் பொருட்களை தனக்கும் தனது குடும்பத்திற்கும் தடுத்து கொண்டார்கள். தமக்காக அடுத்தவர்களை பழிவாங்கியதில்லை. கோபப்பட்டதுமில்லை.

நபி (ﷺ) அவர்களின் 25 வயதில், கதீஜா பின்த் குவைலித் (رضي الله عنها) என்ற பெண்மணியின் வணிகராக சிரியாவுக்குச் சென்றார். கதீஜா (رضي الله عنها) பெரும் கௌரவமும் செல்வமும் கொண்ட ஒரு சிறப்பு மிக்க வணிகப் பெண்னாக காணப்பட்டார்கள். தனது வியாபார நடவடிக்கைகளுக்காக ஆண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள்.

மக்கா குறைஷி வியாபாரிகள் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் உண்மை வார்த்தைகள், சிறந்த நேர்மை மற்றும் கனிவான நடத்தை பற்றி கதீஜா (رضي الله عنها) அம்மையாரிடம் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபிகளாரை வரவழைத்து தனது வியாபாரத்தை எடுத்து நடாத்துமாறும் அதற்கான தகுந்த ஊதியம் தருவதாகவும் கூறினார்கள். அதன் படி நபி (ﷺ) அவர்கள் கதீஜா (رضي الله عنها) அம்மையாரின் வேலைக்காரனான மேசாராவை அழைத்துக் கொண்டு சிரியாவுக்கு வியாபாரத்திற்கு சென்றார்கள்.

நபி (ﷺ) அவர்கள் திரும்பி வந்த போது, கதீஜா (رضي الله عنها) அம்மையார் தனது பணத்தில், முன்பை விட அதிக லாபத்தையும் ஆசீர்வாதங்களையும் கண்டார். அத்துடன் அன்னாரின் நல்ல நடத்தை, நேர்மை, ஆழ்ந்த சிந்தனை, நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் கதீஜா அவர்களை கவர்ந்தது.

பல முக்கிய பிரமுகர்கள் செல்வாக்கும், வசதியும், கௌரவும் மிக்க கதீஜா (رضي الله عنها) அவர்களை திருமணம் செய்து கொள்வதற்கு அணிவகுத்து நின்றாலும் அவர்கள் நபியவர்களின் சிறந்த நற்குணங்களை கண்டு நபியவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். முஹம்மது நபி (ﷺ) அவர்கள் கதீஜா (رضي الله عنها) வுக்கு இருபது ஒட்டகங்களை மஹராக கொடுத்தார்கள். முஹம்மது (ﷺ) அவர்கள் கதீஜா (رضي الله عنها) இறக்கும் வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நபி (ﷺ) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர மற்ற அனைவரும் அன்னை கதீஜா (رضي الله عنها) க்கு பிறந்தாவர்கள்! முதல் குழந்தை காஸிம், பிறகு ஜைனப், ருகைய்யா, உம்முகுல்ஸும், பாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். ஆண் பிள்ளைகள் அணைவரும் சிறு வயதிலேயே வபாத்தாகி விட்டனர். பெண் பிள்ளைகள் அணைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாத்தை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள். பாத்திமா (رضي الله عنها) அவர்களைத் தவிர மற்ற மூவரும் நபி (ﷺ) அவர்கள் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர்.

முஹம்மது நபி (ﷺ) அவர்கள் தமது நாற்பது வயதை அடைந்ததும் நகரத்தை விட்டு விலகி ஹிரா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய குகையில் நீண்ட காலம் தனிமையில் தங்கத் தொடங்னார்கள். ஒரு முறை அக் குகையில் அல்லாஹ்வின் படைப்புகளின் மர்மங்களைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்த நேரத்தில்,

வானவ தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் நபி (ﷺ) அவர்களின் முன் தோன்றினார்கள், திடுக்கிட்டு பயந்துபோன நபி (ﷺ) அவர்களிடம், ‘நான் தான் ஜிப்ரயீல்’ “அல்லாஹ்வுடைய செய்திகளையும், அவனுது வேத வெளிப்பாடுகளையும் மனித இனத்திற்கு அறிவிப்பதற்காக நீர் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டு இருக்கிறீர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதன் பொருட்டு இறைவனால் அனுப்பப் பட்ட வானவர் நான்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் தன்னை அடையாளம் காட்டி கொண்டார்கள்.

அத்துடன் முஹம்மது அல்லாஹ்வின் நபியாக, தூதராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்து, அவரை ஓதப் பணித்தார்கள். நான் ஓதுபவன் அல்ல (எனக்கு ஓதத் தெரியாதே!) என்று முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் கூறியதும் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரை இறுகத் தழுவினார்கள். பின் மீண்டும் ‘ஓதுக’ என்றார். அப்போதும் நபி (ﷺ) அவர்கள் ஓதவில்லை. இவ்வாறு மூன்று முறை ஜிப்ரீல் (அலை) தழுவிய பின்னர் நபி (ﷺ) அவர்கள் ஓதத் தொடங்கினார். ‘இக்ர’ என தொடங்கும் ஐந்து இறை வசனங்களை நபி (ﷺ) அவர்கள் ஓதினார்கள் .

முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் அந்த வசனங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, நடுங்கியபடியும் மூச்சிரைத்தபடியும் வீட்டுக்கு ஓடி வந்து தம் மனைவியிடம், “என்னை மூடுகள்! என்னை மறைத்து கொள்ளுங்கள்! (ஒரு போர்வை அல்லது போர்வையால்)”கதீஜா (رضي الله عنها) அவரை பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை மூடியிருந்தார். குகையின் சம்பவத்தை கதீஜா (رضي الله عنها) விடம் தெரிவித்த அவர்கள், தான் திகிலடைந்ததாகவும் கூறினார்கள்.

“அல்லாஹ் உங்களை ஒருபோதும் அவமானப்படுத்த மாட்டான். நீங்கள் உறவுகளை ஒன்றிணைக்கிறீர்கள்; பலவீனர்களின் சுமையை நீங்கள் சுமக்கின்றீர்கள்; நீங்கள் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் உதவுகின்றீர்கள், விருந்தினர்களை மகிழ்விக்கின்றீர்கள், உண்மையின் பாதையில் கஷ்டங்களைச் சகித்துக் கொள்கின்றீர்கள். என்று கதீஜா (رضي الله عنها) அவர்கள் நபிகளாரை சமாதானப்படுத்தி ஆறுதல்டுத்தினார்கள்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு கதீஜா (رضي الله عنها) தனது ஒன்றுவிட்ட சகோதரரான வரக்கா இப்னு நௌஃபல் என்பவரிடம் சென்றார்கள். அவர் முதிர்ந்தவரும், பார்வையற்றவரும், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களை அறிந்தவரும், அவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்தவருமான ஆவார். தான் கேள்விப்பட்டதைப் பற்றி கதீஜா (رضي الله عنها) அவர்கள் அவரிடம் சொன்ன போது, “பரிசுத்தரே! என்று அவர் சத்தமாகச் சொன்னார். பரிசுத்தர்! நிச்சயமாக இவரே மூஸாவிடம் வந்த நமுஸ் (தூய ஆவி) ஆவார். அவர் தம் மக்களின் தீர்க்கதரிசியாக இருப்பார். இதை அவரிடம் சொல்லி தைரியமாக இருக்கும்படி சொல்லுங்கள்” என்றார்.

பெருமானார் கூறிய அனைத்தையும் கதீஜா (رضي الله عنها) அவர்கள் நம்பினார்கள். அத்துடன் முஹம்மத் நபி (ﷺ) அவர்களை இறைதூதராக ஏற்றுக் கொண்டு வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் அவனுடைய திருத்தூதர் என்பதில் முழு நம்பிக்கை வைத்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை முதன்மையாளராக இணைத்துக் கொண்டார்கள்.

உலகுக்கோர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை தமது அறுபத்து மூன்றாம் வயதில் மதினாவில் காலமானார்கள். பெருமானார் மதீனாப் பள்ளியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

2 thoughts on “நபிகள் நாயகம் முஹம்மத் ﷺ

Leave a Reply

error: Content is protected !!