இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பாதிப்படைந்துள்ளதுடன், இரு தரப்பினரும் நேற்று (14) உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ஜூன் 2023 இல், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை செய்யப்பட்டிருந்தார்,
இக் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணையில் தேடப்படும் நபராக கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் குழு கூறியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா மறுத்துள்ளதுடன் சஞ்சய் குமார் வர்மா இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவர் என்றும், ஜப்பான் மற்றும் சூடானுக்கான தூதராக 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையடுத்து இது குறித்து விசாரிப்பதற்காக இந்தியாவுக்கான கனடாவின் தற்காலிக ஹைகமிஷனர் ஸ்டூவர்ட் வீலரை இந்தியா வரவழைத்திருந்தனர்.
இந்தியாவுக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் ஸ்டூவர்ட் வீலர் உட்பட ஆறு உயர்மட்ட இராஜதந்திரிகள் அக்டோபர் 19 சனிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்ததாக இந்திய ஊடகங்கள் பின்னர் செய்தி வெளியிட்டன.
அத்துடன் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்படுவார். இருப்பினும், இந்த அறிவிப்பிற்கு முரணான அறிக்கையில், இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உட்பட ஆறு இராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இராஜதந்திர நெருக்கடியில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 1997 இல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வந்த ஒரு நபர். பின்னர் அவர் கனேடிய குடியுரிமை பெற்றார்.
சீக்கிய மத தீவிரவாதிகளால் கட்டமைக்கப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
ஜூன் 2023 இல் அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டதுடன் அதில் இந்திய அரசாங்கத்திற்கு இப் படுகொலையுடன் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இதனால் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டது.