இலங்கையில் பாலியல் கல்வி என்பது மிகவும் சர்ச்சை மிக்க கேள்விக் குறியான விடையமாக காணப்படுகின்றது. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இளம் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியை வழங்குவதன் மூலம், பிள்ளைகள் தேவையற்ற பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் இல்லையேல் அது நமது கலாச்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இளம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேம்பட்ட வழிமுறைகள் காணப்படும் நாடுகளில் இவ்வாறான பித்தலாட்ட மனநிலை கிடையாது.
பிள்ளைகளுக்கு “உரிய வயதில்” பாலியல் கல்வியை “சரியான முறையில்” வழங்குவது எவ்வாறு என்பது பற்றி அந்த நாடுகளில் சிறந்த வழிகாட்டல் முறைகள் உள்ளன.
பொதுவாக இது தொடர்பில் மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து என்னவெனில், பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே அவர்களின் உடலைப் பற்றிய சில அறிவைக் கொடுப்பது அவசியம் என்றும், பிள்ளைகளுக்கு 5-6 வயதாகும் போது அதாவது பாடசாலை செல்லும் வயதில் அடிப்படை பாலியல் விடயங்களை சொல்லிக் கொடுப்பது சிறந்தது என தெரிவிக்கின்றனர்.
சரி, அந்த பாலியல் கல்வியை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய “சரியான வழி” என்ன? அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அங்கு பிள்ளைகளுக்கு நாம் தவறான தகவல்களை வழங்குகிறோம் என்றால் எதிர்காலத்தில் அந்த தவறுகளை சரிசெய்வது கடினமாக இருக்கலாம்.
அதனால் தான் பெற்றோர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியை “சரியான முறையில” எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கான சில குறிப்புகள் இதோ!
01. உங்களுக்குத் தெரியுமா?
இது தான் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிக் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான விடயம். அது தான் தாங்கள் முன்கூட்டியே பாலியல் சம்பந்தமான விடயங்களைப் பற்றி சரியான முறையில் அறிந்திருக்க வேண்டும்.
நகைப்புக்குரியதாக இருந்தாலும் உண்மை அது தான். பெரும்பாலும் பெற்றோர்களாகிய பெரியவர்களுக்கும் சரியான பாலியல் அறிவு கிடையாது. சரி, பெற்றோர்கள் உறவு கொண்டு தான் பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் உறவு கொள்ளும் முறை தெரியும் என்பது பாலியல் பற்றிய அறிவும் தௌிவும் இருக்கின்றது என்பது அர்தமல்ல.
அதனால் தான் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றிய விடயங்களை சொல்லிக் கொடுக்கும் முன் தாம் அதைப் பற்றி கற்றரிந்து கொள்ள வேண்டும். உடலுறவு கொள்வது எப்படி என்று தெரிந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பான உறவு பற்றி, பாலியல் பற்றிய ஒழுக்க நெறிமுறைகள், மார்க்க வழிகாட்டல்கள் பற்றி நீங்கள் சரியான முறையில் அறிந்து இருக்க வேண்டும்.
எனவே, அந்த விடயங்களை சிறந்த முறையில் அறிந்து கொள்வதே முதல் படியாகும்.
02. விசித்திரமான பதில்களை கொடுக்காதீர்கள்
தான் எங்கிருந்து வந்தேன் என்று பிள்ளைகள் தன் பெற்றோர்களிடம் கேட்டால் பலர பல விதமான விசித்திரமான பதில்களை பிள்ளைகளுக்கு கூறுவார்கள்.
“ரோஜா தோட்டத்திலிருந்து எடுத்து வந்தோம்”, “கொக்கு ஒன்று கொண்டு வந்து தந்தது”, “தேவதை ஒன்று கொண்டு வந்து தந்தது” என்று விசித்திரமான பதில்களைக் கூறி நழுவ முயற்சி செய்கிறார்கள். அதாவது பொய் சொல்கிறார்கள். (பிள்ளைகள் பொய் பேசுவதற்கு கற்றுக் கொள்ளும் முதல் இடம் பெற்றோர்கள் தான்).
இது மிகவும் தவறான வழிகாட்டலாகும். இதுபோன்ற விசித்திரமான பதில்களைக் கொடுப்பதன் மூலம், பிள்ளைகள் அதை நம்புவதை விட, பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சரியான பதில்களைப் பெறுவதில்லை.
பின்னர் பிள்ளைகள் அதற்கான பதிலை தேடிப் பெற முயற்சி செய்யும் போது ஒருவேளை அது தவறான இடமாகவும் இருக்கலாம். எனவே சிறு பிள்ளைகளுக்கு கூட விசித்திரக் கதை காரணங்கள் கூறாமல் சரியான முறையில் அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொடுக்க முடியும்.
“மகனின் அம்மா, அப்பா இருவருமே ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறார்கள், அவர்களின் அன்பு உச்சத்தில் இருக்கும் போது தான், அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்குகிறார்கள், அப்பா ஒரு குழந்தையை அம்மாவின் வயிற்றில் வைக்கிறார், பின்னர் அம்மா தனது வயிற்றில் பல மாதங்கள் குழந்தையை வளர்த்து அதை இந்த உலகிற்கு கொண்டு வருகிறார்”.
இதோ இது போன்ற ஒரு பதிலும் சிறு பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க போதுமானது.
03. தங்களிடம் கேள்விகளை கேட்பதற்கு பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள்
இதுவும் மிக முக்கியமான விடயம். பெரும்பாலும், பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றி பேசுவதற்கு பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள்.
அங்குள்ள பிரச்சனை இதுதான். பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றி பேச பெற்றோர் தயங்கினால், பிள்ளைகள் தனது பாலியல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை, பிரச்சினைகளை யாரிடம் கேட்பது? எங்கிறிந்து தௌிவைப் பெற்றுக் கொள்வது?
பெரும்பாலும் சம வயதுடைய நண்பர்களிடமாக இருக்கலாம், அல்லது (pornography) ஆபாசப் படத்திலிருந்து இருக்கலாம். ஆனால் அந்த ஒரு இடத்திலாவது சரியான, உண்மையான பதில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அதனால் தான்..
பிள்ளைகளுக்கு தமது பிரச்சினைகளை, சந்தேகங்களை கேட்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக பாலியல் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டால் ஒரு போதும் அவர்களை திட்டுவது, நழுவி செல்வது கூடாது.
04. தன் உடலும் அடுத்தவர்களின் உடலும்
முதல் விடயம் – பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களை உங்கள பிள்ளைகளுடன் பேசும் போது உடல் உறுப்புகளுக்கு விசித்திரமான, குழந்தைத் தனமான பெயர்களைப் பயன்படுத்தாதீர்கள்.
மகனின் குஞ்சி மணி, தங்கையின் சுச்சூ போண்ற வார்தைகள் சின்ன குழந்தைகளுக்கு சொல்லலாம். ஆனால் பாடசாலை வயது பிள்ளைக்கு அவனுடைய மற்றும் பிறரின் உடலைப் பற்றி கற்பிக்கும் போது, கண்டிப்பாக சரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
இல்லையெனில் தன் உடல் உறுப்புக்கள் பற்றி பிள்ளைக்கு கார்ட்டூன் யோசனை தான் வருமே தவிர அதைப் பற்றிய யதார்த்தமான தீவிரம் பிள்ளையின் தலையில் வராது.
அடுத்து, ஆண்களின் உடம்பு மற்றும் பெண்களின் உடம்பு எவ்வாறு வேறுபடுகிறது என்பதை தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வரைபடங்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால் அங்கு பிள்ளைக்கு புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான அவசியமற்ற விடயங்களை சொல்வதை விடுத்து எளிமையாக உடல் உறுப்புகளின் பெயர்கள், உடலியல் வேறுபாடுகளை சொல்லிக் கொடுப்பது போதுமானது. அத்துடன் ஒவ்வொருவரின் உடலும் மதிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
5. பாலியல் மற்றும் உடலுக்கான பொறுப்பு மற்றும் மரியாதை
எவருடைய உடலையும் மதித்தல் என்பதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஒருவர் எதிர் பாலினத்தவராக இருந்தாலும் சரி அல்லது ஒரே பாலினத்தவராக இருந்தாலும் சரி, அனுமதியின்றி உடலைத் தொடுவது. அனுமதியின்றி பார்க்க முயற்சிப்பது தவறு என்று தௌிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு பிள்ளை பாலியல் பற்றிய ஆர்வத்தால் மற்றொருவரின் உடலைப் பார்க்க முயற்சிக்காது.
அடுத்து உயரம், குட்டை, பருமன், ஒல்லி, கருப்பு, வெள்ளை, உடல் ஊனம் என்று யாரையும் பாகுபடுத்தாமல் அனைவரையும் மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும், அவர்களையும் அவர்களது உடல்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் பாடி ஷேமிங் செய்பவர்கள் குறைவார்கள்.
இது தவிர, பாலினம் பற்றிய டெக்னிகல் விடயங்களின் போது, பாலினம் பற்றிய சமூக விடயங்களையும் கற்பிக்க வேண்டும். அதாவது, உரிய வயதை அடையும் வரை உறவு கொள்ளாமல் இருப்பதன் முக்கியம். பரஸ்பர சம்மதமின்றி ஒருபோதும் உறவு கொள்ளக் கூடாது. போன்ற விடயங்களையும் இங்கு சொல்லிக் கொடுக்க முடியும்.
அத்துடன்,
06. பாதுகாப்பு!
இது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியை வழங்குவதில் உள்ள மிகவும் தீவிரமான முக்கிய பகுதியாகும். இங்கே, நீங்கள் முக்கியமாக தற்காப்பு பற்றி கற்பிக்க வேண்டும். அதாவது, உங்கள் உடலைத் தெரிந்த அல்லது தெரியாத வேறு யாருக்கும் தொடவோ அல்லது கொடுக்கவோ கூடாது. யாராவது தன்னிடமோ அல்லது தனது சக நண்பர்களிடமோ பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முற்பட்டால் அதனை உடனடியாக பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ முறையிடுவதற்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மேலும், 18 வயது வரை திருமணம் செய்யக் கூடாது என்றும், 16 வயதுக்குட்பட்ட எவருடனும் விருப்பியோ, விரும்பாமலோ உறவு கொள்வது குற்றம் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு, பாலுறவு நோய்கள், பாதுகாப்பான பாலுறவு நடத்தைகள், பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் பற்றிப் புரிந்துகொள்ளும் வயதுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது நல்லது.
07. உங்கள் கருத்துக்களை சரியாகப் பெறுங்கள்: பிள்ளைகளுக்கு சிறந்ததை கொடுங்கள்.
முன்பெல்லாம் ஓரினச்சேர்க்கை, அதாவது homosexuality பற்றி சில பெற்றோர்களுக்கு நடுத்தர வயது வரும் வரை தெரியாது. ஆனால் இன்றைய சமூகத்தில் அவை பரவலான விடயமாக காணப்படுகின்றது. இப்போது சமூகம் அவற்றை தவறான விடயங்களாகவோ அல்லது மனநோய்களாகவோ நினைக்கவில்லை. எனவே, நம் பிள்ளைகளுக்கும் பன்னிரெண்டு அல்லது பதினான்கு வயதிற்குள் இது போண்ற பாலியல் போக்குகள் பற்றி கற்பிக்கப்பட வேண்டியுள்ளது.
ஆனால் இதுபோன்ற விடயங்களைக் கற்பிக்கும் முன், அதைப் பற்றிய தனது கருத்துக்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஓரினச்சேர்க்கைப் போக்கு உள்ளவர்கள் மீது வெறுப்புணர்வு இருந்தால் நீங்கள் உடனடியாக அதிலிருந்து விடுபட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் அதைப் பற்றி பிள்ளைகளுக்கு நடுநிலையான முறையில் கற்பிக்கலாம்.
இங்கு தனது பாலியல் நோக்கு நிலையை எப்படி ஏற்றுக்கொள்வது, அதே போல் மற்றொரு மனிதனின் பாலியல் நோக்கு நிலையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பது எப்படி என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
08. மதிப்பிற்குரிய குடிமகன்
இது பொதுவாக பாலியல் பற்றிய விடயம் மட்டுமல்ல. ஆனால் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி சொல்லிக் கொடுக்கும் போது, இதைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பது பொருத்தமானது.
அதாவது, ஆண், பெண் பாலின வேறுபாடு இல்லாமல், பொதுவாக ஒரு மனிதனை எப்படி மரியாதையுடன் நடத்துவது. குறிப்பாக இன்று சமூகத்தில் காணப்படும் பிரச்சினையாக உள்ள பெண்களை பாலியல் பொருளாக அடையாளம் காண்பது, பாலினத்தின் அடிப்படையில் ஓரங்கட்டப்படுவது போன்ற விடயங்களைப் பற்றியும் அவ்வாறான விடயங்களை தவிர்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கலாம். அந்தப் பொறுப்பை நாம் சரியாகச் செய்தால், நம் பிள்ளைகள் மரியாதைக்குரிய குடிமகனாக, நல்ல மனிதனாக வளர்வதைப் பார்க்க முடியும்.
இப்போது தெளிவாகியிருக்கும். 5 அல்லது 6 வயதில் பாலியல் பற்றி ஆர்வமாக, சந்தேகங்கள் இருக்கும் பிள்ளைகளுக்கு உண்மையான பாலியல் கல்வியை வீட்டிலேயேஅதாவது பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் சரியான வழி என்று. உரிய காலத்தில் பாடசாலையிலும் அது சம்பந்தமாக கல்வி கிடைக்கும். அப்போது, பாலியல் பற்றிய தௌிவான அறிவுடைய, இன்னொருவரை மதிக்கத் தெரிந்த ஒரு குடிமகன் உருவாகுவதற்கு அடித்தளம் பிறக்கும்!
– Reezah Jesmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!