பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல்

தொடர்பாடல்

பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல்

இலங்கை ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், அதன் உறுதியும் ஸ்திரமும் பல்வேறு சமூகங்களிடையே நிலவும் புரிந்துணர்விலும் நல்லுறவிலுமே தங்கியுள்ளது.

இஸ்லாம் இத்தகைய பன்மைத்துவ சமூக அமைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அதன் நிலைபேற்றிற்கு ஆரோக்கியமான நல்லுறவையும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த நாட்டின் பன்மைத்துவ சமூக அமைப்பின் ஓர் அங்கமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவைப் பேணி வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அதனைச் சீர்குலைக்க சில செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் சில இளைஞர்களால் தோற்றுவிக்கப்படுவது மிக வருத்தத்திற்குரியது மட்டுமல்லாது கண்டிக்கத் தக்கதுமாகும்.

பெருன்பான்மையான பௌத்த சமூகத்தைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில் பௌத்த சமூகத்தில் புத்தரின் சிலைகள், உருவப் படங்கள் கண்ணியப்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும்.

எனவே இந்த நிலையில் சில இளைஞர்கள் அத்தகைய சிலைகளை உடைத்து சேதம் விளைவித்தல் பற்றிய செய்தியானது சமூக நல்லுறவுக்காக, பரஸ்பர புரிந்துணர்விற்காக உழைக்கும் அனைவரின் உள்ளங்களிலும் கவலையை தோற்றுவித்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக பௌத்த பெரும்பான்மை மக்களுடன் நல்லுறவைப் பேணி வாழும் முஸ்லிம்கள் என்றும் ஏனைய மக்களின் மத உணர்வுகளை மதித்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இந் நாட்டின் வரலாறு சான்று பகர்கின்றது.

அல்குர்ஆன் ஏனைய மதத்தலங்களை மதிக்கும் படியும் கண்ணியப்படுத்தும் படியும் முஸ்லிம்களைப் பணிக்கின்றது.

உங்களில் ஒவ்வொரு சமூகத்தவருக்கும் சட்டத்தையும் வழிமுறைகளையும் நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான்” (அல்குர்ஆன்5.48)
உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பர். எனவே மனிதர்களை அவர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா? (அல்குர்ஆன் 10.99)
அல்லாஹ்வை பற்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் அறியாமையால் வரம்புமீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் (அல்குர்ஆன் 6.108)

இன்றைய காலகட்டத்தில் பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல் சம்பந்தமான இப் போதனைகள் முஸ்லிம்களால் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்படல் அவசியமாகும்.

அல் குர் ஆன் பிற மதத்தவர்களுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ளவேண்டிய நெறிமுறைகளை மேற்குறிப்பிட்ட திருவசனங்களில் மிகச் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளை பேணப்படாத நிலையில் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அது எச்சரித்துள்ளது.

அவர்கள் எத்தகையோரென்றால் நியாாமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) வௌியேற்றப்பட்டவர்கள், ‘எங்களுடைய இரட்சகள் அல்லாஹ் (ஒருவன்) தான்என்று கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் வாக்காக இருக்கவில்லை) மேலும், மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, (மற்ற) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் , (பாதிரிகளின்) மடங்களும், கிறிஸ்தவர்களின் வணக்கஸ்தலங்களும், யூதர்களின் வணக்கஸ்தலங்களும், மஸ்ஜித்களும்இவற்றில் அல்லாஹ்வுடைய பெயர் அதிகமாக கூறப்படுபவை (யாவும்) இடிக்கப்பட்டுப் போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சியமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சியமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன் (அல்குர்ஆன் 22.40)

கலாநிதி எம்..எம் சுக்ரி
இஸ்லாமிய சிந்தனை (ஜனவாரிமார்ச் 2019)


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!