தொழில்நுட்ப ரீதியாக நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்ட உலகில் மொபைல் போன் என்பது அனைவரின் கைகளிலும் காணப்படும் ஒரு பொதுவான உபகரணமாக மாறிவிட்டது. சில நேரங்களில் அது உங்கள் தனிப்பட்ட தகவலைச் சேமிக்கும் விலையுயர்ந்த மற்றும் மதிப்புமிக்க சாதனமாக இருக்கலாம்.
ஆனால் அதைப் பயன்படுத்தும் போது சில நேரங்களில் உங்கள் கவனக்குறைவால் தொலைந்து போகலாம் அல்லது திருடப்பட்டு விட்டால் அது உங்கள் பணப்பையை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும்.
உங்கள் விலைமதிப்பற்ற மொபைல் போன் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? அதை மீண்டும் எப்படி கண்டுபிடிப்பது? அதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தொலைந்த போனை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்ன?
மொபைல் தொலைபேசி தொலைந்தால் முதலில் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்களது சிம் இனைப்பை துண்டிக்க வேண்டும்.
அந்த எண்ணைத் தற்காலிகமாகத் துண்டிக்கும்படி உங்கள் மொபைல் போன் சேவை வழங்குநரிடம் கேட்கலாம். அதற்கு உங்கள் பெயர் மற்றும் அடையாள எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து உங்கள் தொலைந்த மொபைல் போன் மூலம் அணுகக்கூடிய இணைய கணக்குகளின் (மின்னஞ்சல், பேஸ்புக் கணக்குகள், ட்விட்டர் போன்றவை) கடவுச்சொற்களை மாற்றிக் கொள்ள வேண்டும்,
குறிப்பாக உங்களிடம் ஈமெயில் கணக்குகள் இருந்தால் அதன் கடவுச் சொற்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் போனைக் கண்டுபிடிக்கும் வரை உங்கள் கணக்குகள் பாதுகாப்பற்றதாவே இருக்கும்.
துண்டிக்கப்பட்ட குறிப்பிட்ட அதே எண்ணை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமா?
ஆம். சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடமிருந்து அந்த எண்ணுக்கான புதிய சிம்மைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைந்த மொபைல் போனை எப்படி கண்டுபிடிப்பது?
2 முறைகள் உள்ளன
01. போன் காணாமல் போனது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தல்.
இது உங்கள் போனைக் கண்டுபிடிப்பதற்கான சட்ட உதவி கோரிக்கையாகும். நீங்கள் தொலைபேசி வாங்கியதற்கான ரசீதுகள், உங்கள் பெயரில் உள்ள தொலைபேசி பில், தொலைபேசியின் IMEI எண் மற்றும் சிம் கார்டின் தொலைபேசி எண் போன்றவற்றை காவல்துறைக்கு வழங்குவதன் மூலம், குறிப்பிட்ட போனுக்கான உங்கள் உரிமையை உறுதிப்படுத்த உதவுதுடன் இலகுவாக விசாரணைகளை மேற்கொள்ளவும் உதவும்.
தொலைந்து போன போனின் IMEI எண் தெரியவில்லை என்றால் எப்படி கண்டுபிடிப்பது?
IMEI எண் உலகில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு தொலைபேசி சாதனத்தையும் தனித்துவமாக அடையாளம் காண உதவுகிறது. இலங்கையில் விற்கப்படும் ஒவ்வொரு தொலைபேசியிலும் IMEI இலக்கம் கட்டாயம் இருக்க வேண்டும் அவ்வாறு IMEI இலக்கம் இல்லாதவை போலி கையடக்கத் தொலைபேசிகளாக இருக்கலாம்.
- உங்கள் மொபைல் போனின் IMEI எண்ணைப் பெற *#06# குறியீட்டை உள்ளிடவும். அதன் பிறகு, உங்கள் தொலைபேசியின் IMEI எண்ணை அறிந்து கொள்ளலாம். இந்த எண்ணை நீங்கள் எளிதாக பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு இடத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
- தொலைந்து போன தொலைபேசியின் தொலைபேசி எண்களை தெரிவித்து குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை மூலம் பெறலாம்.
- நீங்கள் வாங்கிய தொலைபேசியின் பெட்டியில் கூட IMEI எண் பொறிக்கப்பட்டிருக்கும்.
02. www.ineed.police.lk என்ற இணையத்தளத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு ஆன்லைனில் முறைப்பாடு செய்தல்.
தொலைந்து போன தொலைபேசித் தகவல்களைப் புகாரளிப்பதற்கான முழுமையான ஆன்லைன் செயல்முறையை (www.ineed.police.lk) இலங்கை காவல்துறையும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் 2018 டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்தியது.
பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்படும் காணாமல் போன கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கை பொலிஸாரால் இந்தத் தளத்திற்கு அனுப்பப்படுகின்றது.
இந்த இணையத்தளத்தின் ஊடாக இப்போது இந்த டிஜிட்டல் வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் பொலிஸ் நிலையம் அல்லது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRCSL) நேரில் செல்லாமல் தமது முறைப்பாட்டை அளிக்கலாம்.
காவல் நிலையங்களில் மட்டுமே புகார்கள் ஏற்கப்படுகின்றன. அல்லது மேலே குறிப்பிடப்பட்ட www.ineed.police.lk இணையத்தளத்தின் மூலம் முறைப்பாடு செய்யலாம். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRCSL) புகார் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- அத்துடன் ஆன்லைனில் புகார் அளிக்கும் போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
- ஆன்லைன் முறை மூலம் புகார் அனுப்பப்படும் போது, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் உங்களது புகாரை அனுப்ப வேண்டியதில்லை, குறிப்பிட்ட காவல் நிலையங்கள் சம்பந்தப்பட்ட புகார்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்புகின்றன.
அத்துடன் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் நகல்களை தபால் மூலம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TRCSL) அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
• புகாரின் தற்போதைய நிலையை எப்படி அறிந்து கொள்வது?
www.ineed.police.lk என்ற இணையத்தளத்தில் உங்கள் கணக்கை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொலிஸ் நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைச் சரிபார்க்கலாம்.
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!