அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?

அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?

டாக்டர் ஜாக்கிர் நாய்க்

கேள்வி: அல் – குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் (ﷻ) மிக்க கருணையுள்ளவன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக இறைவன் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?

    பதில்: 01. அல்லாஹ் (ﷻ) அளவில்லா கருணையாளன்..!

அல்லாஹ் (ﷻ) அளவில்லா கருணையாளன் – என்று அல்-குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. அல்-குர்ஆனில் காணப்படும் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (சூரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து அத்தியாயங்களும் (بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ) – என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன.

இந்த அரபி வசனத்தின் பொருள் – அளவற்ற கருணையும், நிகரறில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ் (ﷻ)வின் திருப்பெயரால்  – என்பதாகும்.

    பதில்: 02. அல்லாஹ் (ﷻ) மன்னிப்பாளன்.

அல் குர்ஆனின் உள்ள அநேகமான வசனங்கள் அல்லாஹ் (ﷻ) மன்னிப்பவன் என்று கூறுகிறது.

குறிப்பாக அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் சூரத்துன்னிஸாவின் 25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் சூரத்துல் மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றது.

..இன்னும் அல்லாஹ் (ﷻ) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்..( 4:25).

..அல்லாஹ் (ﷻ) மிக்க மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்..( 5:74).

    பதில்: 03.  அல்லாஹ் (ﷻ) தண்டனைக்குறியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகிறான்.

அல்லாஹ் (ﷻ) கருணையாளனாகவும், மன்னிப்பவனாகவும் இருந்தாலும் கூட– தண்டனை பெறத் தகுதியான பாவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கின்றி தண்டனை வழங்குகிறான்.

அல்-குர்ஆனில் பல இடங்களில் இறையச்சம் கொள்ளாதவர்களுக்கும், இறை உண்மையை ஏற்காதவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது.

அல்லாஹ் (ﷻ) வின் ஏவல்களை ஏற்க மறுத்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.

அல்-குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ் (ﷻ) வின் கட்டளையை ஏற்க மறுத்த பாவிகளுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான தண்டனைகளைப் பற்றியும் அவைகள் எவ்வாறு வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.

‘யார் நமது இறை வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் (ﷻ) மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.’ (4:56)

    பதில்: 04.  அல்லாஹ் (ﷻ) நீதியாளன்.

இங்கு கேட்கப்பட்ட கேள்வி அல்லாஹ் (ﷻ) மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?. என்பதாகும்.

இங்கு நாம் ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். அல்லாஹ் (ﷻ) மன்னிப்பவன். அளவற்ற கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் (ﷻ) நீதியாளனும் ஆவான்.

எனவே நீதி பரிபாலிக்கப்பட வேண்டு எனில், நிராகரிப்பவர்களுக்கும், பாவிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கியேத் தீர வேண்டும்.

அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் சூரத்துன்னிஸாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘நிச்சயமாக அல்லாஹ் (ﷻ) (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்;…’ (4:40)

மேலும் அல்-குர்ஆனின் 21வது அத்தியாயம் சூரத்துல் அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவுக்கும் சிறிதளவேனும் அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.’ ( 21:47)

    பதில்: 05.  பரீட்சையில் காப்பியடிக்கும் மாணவனை – மன்னிக்கக் கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:

பரீட்சை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மாணவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக ஆசிரியர் ஒருவர் பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஆசிரியர் கருணையுள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனதுடையவர். எனவே அந்த மாணவனுக்கு தொடர்ந்து காப்பி அடிக்க அனுமதித்து விடுகின்றார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

கண் விழித்து இரவு முழுவதும் படித்து விட்டு வந்து பரீட்சை எழுதும் ஏனைய மாணவர்கள் அந்த ஆசிரியரை கருணையுள்ளவர் மன்னிக்கும் மனதுடையவர் என்று ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அந்த ஆசிரியரை அநியாயக்காரர் என்றும் அழைப்பார்கள்.

ஆசிரியரின் கருணை பண்பு மேலும் பல மாணவர்களை பரீட்சையில் காப்பி அடிக்கத் தூண்டுதலாக அமையும்.

இது போன்று எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை பரீட்சையில் காப்பி அடிக்க அனுமதி வழங்கினால், பரீட்சைக்காக படித்து எழுதும் பழக்கம் மாறி, மாணவர்களிடையே காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும்.

காப்பி அடிப்பதால் அனைத்து மாணவர்களும் அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைவார்கள். இவ்வாறு பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை வாழக்கையில் அவமானத்தையும், தோல்வியையும் தான் சந்திப்பார்கள். மாணவர்களுக்காக பரீட்சை நடத்துவதின் முழு நோக்கமும் தோல்வி என்பதும் நிச்சயம்.

    பதில்: 06.  மனிதனது இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான பரீட்சைக் களம்.

நமது இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்குரிய பரீட்சையாகும். அல்-குர்ஆனின் 67வது அத்தியாயம் சூரத்துல் முல்க்–ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக மன்னிப்பவன்.'( 67:2)

    பதில்: 07.  எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல் அல்லாஹ் (ﷻ)  மன்னித்து விடுவதாக இருந்தால் யார் தான் அல்லாஹ் (ﷻ)வுக்கு அடிபணிவார்கள்?.

எந்த மனிதருக்கும் அல்லாஹ் (ﷻ) தண்டனை அளிப்பதில்லை. எல்லா மனிதர்களையும் மன்னித்து விடுவான் என்று இருந்தால் – அல்லாஹ் (ﷻ) வுக்கு அடி பணிந்து மனிதர்கள் ஏன் நடக்க வேண்டும்?.

யாரும் நரகத்துக்கு செல்ல மாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கின்றேன். ஆனால் மனிதர்களாகிய நாம் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாக மாறி விடும்.

அனைத்து மனிதர்களும் பாரபட்சமின்றி சுவர்க்கத்திற்கு செல்வார்கள் எனில் – இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் தான் என்ன?. எனவே இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கான ஒரு பரீட்சையேயன்றி – வேறில்லை.

    பதில்: 08.  அல்லாஹ் (ﷻ) – தனது கட்டளைகளுக்குக் கீழ் படிகின்றவர்களுக்கு மட்டும் தான் மன்னிப்பு வழங்குவான்.

அல்லாஹ் (ﷻ) – தனது கட்டளைககளுக்குக் கீழ் படிகின்றவர்களுக்கு மாத்திரம் தான் மன்னிப்பு வழங்குவான். அல்-குர்ஆனின் 39வது அத்தியாயம் சூரத்துல் ஜுமரின் 53 முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ் (ﷻ) வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (ﷻ) பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்’ (நபியே!) நீர் கூறுவீராக.’ ( 39:53)

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (39:54)

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கு அருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். ( 39:55)

நீங்கள் செய்கிற தவறுகளிலிருந்து நான்கு வகையான செயல்கள் மூலம் திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:

முதலில் நீங்கள் செய்யும் தவறான, பாவமான விடயங்கள் சரியான செயல்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக செய்யும் தவறுகளை, பாவங்களை உடனடியாக நிறுத்துங்கள்.

மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை, பாவங்களை இனிமேல் ஒருபோதும் செய்யாதீர்கள்.

கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால், பாவங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்பை வேண்டி அதற்கான பரிகாரம் தேடுங்கள்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

One thought on “அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?

Leave a Reply