சமூக வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்க்கையில் இழப்பவைகள் என்ன?

சமூக வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்க்கையில் இழப்பவைகள் என்ன?
சமூக வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்க்கையில் இழப்பவைகள் என்ன?
நாங்கள் உண்மையில் ஒரு சமூக ஊடக சகாப்தத்தில் வாழ்கிறோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக நாம் செய்வது போனை கையிலெடுப்பது தான். அதைக் கையில் எடுத்ததும் நாம் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களுக்குச் சென்று என்ன நடந்ததுள்ளது என்பதைப் பார்க்கின்றோம்.

அதே போல் உறங்கச் செல்வதற்கு முன் நாம் செய்யும் கடைசிக் காரியம், போனை எடுத்து, நமக்குப் பிடித்தமான சமூக ஊடகங்களில் உலவுவதும், அரட்டை அடிப்பதும்தான்.

இப்போது நாம் புத்தகங்களைப் படிப்பதில்லை, செய்திகளைப் பார்ப்பதில்லை. விதவிதமான புத்தகங்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் இருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

சமூக ஊடகங்கள் மூலமாக உள்நாட்டில் வௌிநாட்டில் என்ன நடக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆனால் உண்மையில், இதுபோன்ற சமூக ஊடகங்களில் நாம் வாழும்போது, ​​​​எம்மால் தவறவிடப்பட்ட, தவறவிட்ட விடயங்கள் இருக்கின்றதா? ஆம், உண்மையில் இருக்கிறது. அவை என்னவென்று நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

இதன் மூலம் நாம் நாள் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் இருப்பது பிரயோசனமானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வோம்.

01. உண்மையான செய்திகள் – Real News

இது கவனமாக படிக்க வேண்டிய விடயமாகும். இப்போது முன்னணி தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோ சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய தகவல்களை வழங்குகின்றன. அவைகள் பெரும்பாலும் உண்மையான செய்திகளாகத் தான் இருக்கும். ஆனால் நாங்கள் இங்கு அதைப் பற்றி பேசவில்லை.

மக்களால் பகிரப்படும் செய்திகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சமூக ஊடக பிரபலங்கள் பகிரும் செய்திகள் மற்றும் மீம்ஸ்களை அந்த சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் போலியாக இருக்கலாம்.

அதனால் தான் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதால் உண்மையான செய்திகளை நாம் அறிந்து கொள்ளாமல் உண்மையான தகவல்கள் தவறவிடப்படுகின்றன.

ஆனால் இன்னும் ஒரு விடயம். சமூக ஊடகங்களை தவிர்த்து, குறிப்பிட்ட ஒரு செய்திச் சேனலையோ அல்லது ஒரு செய்தித்தாளையோ பார்த்து உண்மையான செய்திகளைப் பெற முடியாது.

எனவே, செய்திகளை அறிவுபூர்வமாகப் பார்ப்பது மற்றும் பல செய்தி ஆதாரங்களைப் பார்த்து உண்மையான தகவல் எது என்பதை அறிந்து கொள்வது சிறந்ததாகும்.

02. உண்மையான கருத்து – Real Opinion

இதுவும் மேலே கூறிய விடயத்தை போன்றது தான். அதாவது சமூக ஊடகங்களில் அதிகம் செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencers) மற்றும் பிரபலமான தனிப்பட்ட பக்கங்கள் உள்ளது. அவர்கள் சில பல காரணங்களுக்காக சில விடயங்களை சமூகமயமாக்குகிறார்கள்.

இப்போது, ​​பெரும்பாலும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு இல்லாதவர்கள் அப்படிப்பட்டவர்கள் (influencers) சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் தங்கள் சொந்த கருத்தை அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அந்த கருத்துக்கு அடிப்படையாக அமைந்த சம்பவம்கள் உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க சமூக வலைதளங்களில் சிக்கி தவிக்கும் பலருக்கு நேரம் கிடையாது.

எனவே, நீங்கள் சமூக ஊடகங்களில் இருந்து விலகி, ஏதாவது நடந்தவுடன் அது உண்மையா இல்லையா என்பதை சற்று கண்டறிந்தால், உண்மையான தகவல் எதுவென்பதை அறிந்து கொள்ளலாம்.

03. உண்மையான கூடுதல் கற்றல் – Real Extra Learning

இதுவும் உண்மையில் சமூக ஊடகங்களால் வீணாகும் காலத்துடன் தொடர்புடையது தான்.

இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி அதிகம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றால் மட்டும் வேலைக்குச் செல்ல முடியாது.

அதற்கும் மேலாக, உங்கள் தகுதிகளை, திறமைகளை மேம்படுத்தி, தொடர்ந்து கற்க வேண்டும். அவ்வாறு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஆன்லைனில் கூட  பல வாய்ப்புகள் உள்ளது.

எனினும் அந்த வாய்ப்புகளை நீங்கள் கண்டுபிடித்தாலும், அத்தகைய இடத்திலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.

ஆனால் ஆன்லைனில் செலவழிக்கும் உங்கள் கால நேரத்தை சமூக ஊடகங்களில் செலவழித்தால், ஆன்லைனில் கற்று திறமைகளை வளர்த்துக் கொள்வது பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை!

04. உண்மையான அமைதியான நேரம் – A Real Quiet Time

பொதுவாக இந்த உலகில் பெரும்பாலான மக்கள் பைத்தியம் பிடித்தது போல் ஏதோ பந்தயத்தில் ஓடுகிறார்கள் என கூறுவார்கள். எனவே இது உண்மையில் பொய்யல்ல. அத்தகைய வாழ்க்கையை  சற்றேனும் சமநிலைப்படுத்த சில அமைதியான நேரங்கள் தேவை.

அதாவது சுதந்திரமாக நிம்மதியாக ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு, ஒரு டீ, காபியை நிதானமாக ரசித்துக் குடிப்பதற்கு, அமைதியான வெளியில் அமர்ந்து வானத்தைப் பார்ப்பதற்கு என்று அமைதியானதொரு நேரம்…

ஆனால் சமூக ஊடக அடிமைத்தனத்தால் என்ன நடக்கின்றது? அப்படி சுதந்திரமாக அமைதியை நாடி உட்கார்ந்தாலும் அடுத்த கணம் செய்வது போனை எடுத்து பேஸ்புக் போவது தான். தூங்குவதற்காக போனாலும் அங்கும் போனை எடுத்துக்கொண்டு பேஸ்புக்கிற்கு போவார்கள்.

இறுதியாக, சமூக ஊடகங்களால் தாங்கள் நிம்மதியை இழந்துவிட்டோம் ஒரு கணம் கூட நிம்மதியாக இருப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதை அவர்கள் உணரும் போது காலம் கடந்து போயிருக்கும். காலம் கடந்த ஞானம் எதற்கு..?

05. உண்மையான மக்கள்  – Real People & Real Friends

இதுவும் இன்று காணப்படும் ஒரு உண்மையான பிரச்சனையாகும். இன்று எத்தனை பேருக்கு உண்மையான மனிதர்கள் மற்றும் உண்மையான நண்பர்கள் உள்ளனர்?

முகநூல் போன்ற சமூக ஊடகளில் நீங்கள் சிறந்த நண்பர்களைப் பெறலாம். எனினும் அந்த இணைய நண்பர்களினால் நமது உண்மையான வாழ்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதே யதார்தம்.

சமூக ஊடக நட்பானது யதார்தமான வாழ்க்கையில் கிடைக்கும் நட்பை போன்று கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்கள் சமூக ஊடகங்களிலிருந்து விடுபட்டு நிஜ உலகில் உண்மையான நபர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினால், நீங்கள் எந்த வகையான வாழ்க்கையை இழக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

06. உண்மையான அந்தரங்கம் – Real Privacy

இதுவும் இன்றைய சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. அதாவது தனிப்பட்ட அந்தரங்க விடயங்களை பாதுகாப்பது.

இப்போதெல்லாம், கிட்டத்தட்ட எல்லோரும் சமூக ஊடகங்களுக்கு வந்து இரவில் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் இருந்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது வரை அனைத்து விடயங்களையும் பகிர்கின்றனர்.

ஆனால் இங்கு பலருக்குப் புரியாத விடயம் என்னவென்றால், தங்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்தையும் இப்படி அப்டேட் செய்வதன் மூலம், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் பலர் நன்றாக அவதானித்துப் புரிந்து கொள்கிறார்கள்.

பிற்காலத்தில், அதுவே நமக்குக் கடுமையான ஆபத்தை, இழப்புகளை விளைவிக்கும் அளவிற்கு வாய்பாக அமைந்து விடும்.

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி உங்கள் அந்தரங்க தனியுரிமையை எப்படி இழக்கிறீர்கள் என்பதை நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்ள விரும்பினால், முதலில் உங்களின் அந்தரங்க தனியுரிமை எவை, அது உங்களுக்கு எவ்வளவு மதிப்புள்ளது அதை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

07. நிஜ வாழ்க்கை முறை – Real lifestyle

இதுவும் இன்று காணப்படும் ஒரு உண்மையான பிரச்சனையாகும். சமூக வலைதளங்களில் அடிமையாகி சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தமக்கென்று சொந்த வாழ்க்கை இல்லை என்பதே உண்மை.

உண்மையான வாழ்க்கை என்றால் என்ன? அதுவது ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழ்வதற்கு போதுமான நேர காலம் இருப்பது தான் உண்மையான வாழ்க்கையின் அடிப்படையாகும்.

நாங்கள் படிக்க அல்லது தொழில் செய்ய வேண்டும். தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதையெல்லாம் செய்து முடித்து விட்ட பிறகு ஏதோ குறைந்த நேரமே மீதம் இருக்கும், ​​

அந்த சொற்பமான மீதமுள்ள நேரத்தையும் சமூக வலைதளங்களில் மூழ்கடித்துவிட்டால், வாழ்க்கைமுறையை சமநிலைப்படுத்த அவசியமான உடற்பயிற்சி, ஓய்வு, தூக்கம் என்பவற்றுக்கு போதுமான கால நேரம் கிடைக்காமல் போய்விடுகின்றது.

அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் மற்றவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை உருவாக்குவதற்குப் பதிலாக, அடுத்தவர்கள் செய்வதையே தாமும் செய்ய முற்படுகின்றனர்.

அல்லது, சமூக ஊடகங்களில் மற்றவர்கள் வைத்திருக்கும் விடயங்களைப் பார்த்து தன்னிடம் இல்லாததைப் பற்றி புலம்பிய படி தமது வாழ்கையை வீணடித்து விடுகின்றனர்.

இவ்வாறு தான் சமூக ஊடக அடிமைத்தனம் மூலம் நமது உண்மையான வாழ்க்கை முறை வீணாகிப் போகின்றது.

அப்படியெனில் இப்போது நாம் என்ன செய்வது? நாம் இங்கு சமூக ஊடகங்கயை மொத்தமாக மூடிவிட்டு தோட்டத்தில் உள்ள பூக்களை மாத்திரம் பார்துக் கொண்டிருங்கள் என்று சொல்லவில்லை. சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்திற்கும் நிஜ உலக வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் நமது மொத்த காலத்தை வீணடிக்காமல் அதில் நமக்கு தேவையான முக்கிய பயன்பாட்டை மற்றும் பெற்றுக் கொண்டு நிஜ வாழ்கை சிறப்பானதாக அமைவதற்கு முன்னுரிமை கொடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.

Reezah Jasmin


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!