குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள், ஆனால் பாசம் என்றால் இது தான் என்று பல பெற்றோர்கள் நினைக்கின்றார்கள்!
குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. குழந்தை பெற்று வளர்பதற்கு இருவர் திருமணமாகி உறவு கொள்வதற்கான நிலைமைகள் இருந்தால் மாத்திரம் போதுமானதாக இல்லை.
குழந்தைகளைப் பெறுவதற்கு, பெற்றோர்கள் அதற்குத் பரிபூரணமாக தயாராக இருக்க வேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தயாராக இருப்பது தான் குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
சரி அவையெல்லாம் நிறைவடைந்து ஒரு குழந்தையை வளர்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை. குழந்தைகளை வளர்ப்பதற்கான பக்குவமான அறிவு அவசியம்.
உதாரணத்திற்கு, குழந்தைகள் தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு அடிப்பதும், திட்டுவதையும் தவிர பெற்றோர்களுக்கு வேறெதுவும் தெரியாது என்றால் அது குழந்தை வளர்ப்பு கிடையாது.
எனவே குழந்தைகளை வளர்க்கும் போது பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பேச போகிறோம். பிரச்சனை என்னவென்றால், குழந்தைகளுக்கு அதிகமாக பாசம் காட்டுவதால் தான் பல தவறுகள் நடக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர்.
01. தனியுரிமை பற்றிய உணர்வை, புரிதலை இல்லாமல் செய்தல்
இன்று நமது வீடுகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான தனிப்பட்ட அந்தரங்க உரிமைகள் என்ன? ஒன்றும் கிடையாது. குழந்தைப் பருவம் முதல் தனது பிள்ளையின் பெயரில் ஒரு கடிதம் வந்தாலும் அதை முதலில் பிரித்து பார்பது அம்மா தான். ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்க தெரியாத வயது என்றால் அதைச் செய்வது சரி என்று சொல்லலாம்.
ஆனால் உயர்நிலைப் படிக்கும் வயதிலும், பல்கலைக் கழகம் செல்லும் வயதிலும், வேலை கிடைக்கும் வயதிலும், தனது பிள்ளைகளின் பெயரில் வரும் கடிதங்களை பெற்றோர்கள் அவ்வாறு பார்க்கிறார்கள் என்றால் அது பாசத்தினால் என்று கூற முடியாது அது தனியுரிமை மீறலாகும்.
அதே போன்று பல வீடுகளில் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் அறைகளுக்கு பெற்றோர்கள் திடீரென உள்ளே செல்கிறார்களே தவிர கதவை தட்டி விட்டு உள்ளே வரும் வழக்கம் கிடையாது.
இன்னும் சில பெற்றோர்கள், தனது வயது வந்த பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு தொலைப் பேசி அழைப்பு வந்தாலும், யார் அழைத்தார்கள், எதற்காக அழைத்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வரை நிம்மதியே இருக்காது.
பிள்ளைகளின் சிறுவயதிலிருந்தே இதைச் செய்வதன் மூலம், பெற்றோர் குழந்தைக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கிறார்கள். இவ்வாறு அடுத்தவர்களின் தனியுரிமையை ஆக்கிரமிப்பது பரவாயில்லை என்று.
மிக மோசமான விடயம் என்னவென்றால், இவ்வாறு பெற்றோர்கள் பிள்ளைகளின் தனியுரிமையை மீறுவது தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் கெட்ட விடயங்களில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக என்று சமூகத்தில் பெரும்பாலானோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால், பிள்ளைகள் பெரியவராக வளர்ந்த பின்னரும் தனியுரிமையின் வரம்புகளைக் கற்றுக் கொள்வதில்லை.
02. ஸ்டீரியோடய்ப்ஸை பழக்கப்படுத்தல்
‘ஸ்டீரியோடைப்’ என்பது ‘இது இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்று சமுதாயம் வகுத்து வைத்துள்ள பொதுவான, வழக்கமான பழைய நம்பிக்கை அல்லது மாறாத கருத்துரு எனக் கூறலாம்.
வீட்டில் பெற்றோரிடம் இருந்து, குழந்தைகள் முன் இந்த வகையான ஸ்டீரியோடைப்களை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகளும் அந்த தீய பழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.
சில சமயம் வீட்டில் சகோதர சகோதரிகள் இருக்கும் போது, வீட்டிலுள்ள அண்ணன் ஆண் என்பதால் வீட்டு வேலைகளைக் கற்றுக் கொள்ள அவசியமில்லை, ஆனால் தங்கை பெண் என்பதால் வீட்டு வேலைகள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் அவள் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். அண்ணனின் வேலையைக் கூட செய்ய வேண்டும் என்ற கருத்து சில வீடுகளில் காணப்படுகின்றது.
சகோதர பாசத்தினால் வேலைகளை செய்து கொடுப்பது ஒரு விடயம். எனினும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற ஸ்டீரியோடைப்பை சிறு வயதிலிருந்தே தலையில் சுமத்துவது வேறு விடயம் .
அடுத்து, பக்கத்து வீட்டு பையன் இப்படித்தான், அந்த மக்கள் அப்படித்தான், எல்லா முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் ஒன்றுதான். பெரியவர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும், போண்ற ஸ்டீரியோடைப்பான விடயங்களை பெற்றோர்கள் அன்றாட பேச்சு உரையாடல்களின் மூலம் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கின்றனர். பின்னர் அக் குழந்தைகளும் அந்த ஸ்டீரியோடைப்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள்.
03. திறன்களை வளர்துக் கொள்ள பயிற்சியளிக்காமை
இது இன்றைய சமூகத்தில் நாம் காணும் மற்றுமொரு பிரச்சினை. சமூகத்தில் பல பெரியவர்களுக்கு உயிர்வாழத் தேவையான திறன்கள் இல்லை. அதாவது, இன்றைய சமூகத்தில் நம்மைச் சுற்றியுள்ள ஆண்களில் எத்தனை பேருக்கு சமைக்க தெரியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்?
ஆண் தரப்பைப் பொறுத்த வரையில், சமைப்பது போன்ற திறமையின் அளவு அபாயகரமான அளவில் குறைவாவே காணப்படுகின்றது. ஆனால் இன்றைய பெண்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் அதிகமானவர்களுக்கு இந்த திறமை இல்லை தான்.
ஆனால் சமைக்க முடியும் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய அடிப்படைத் திறன்களில் ஒன்றாகும். அத்துடன் வீடு, தோட்டம், வயல் ஆகியவற்றைப் பராமரித்தல் என்பதும் அடிப்படைத் திறன்களாகும்.
தனது வீட்டை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது என்பதும் அடிப்படை திறனாகும். வீட்டில் ஒரு மின் குமிழ் பழுதடைந்தால் அதை சரிசெய்ய எலக்ட்ரீஷியனை அழைக்க வேண்டுமா? அப்புறம் முடிவெடுக்கும் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் போண்றவை அன்றாட வாழ்வில் தேவைப்படும் அடிப்படை திறன்களாகும்.
எனவே இந்த திறன்கள் ஒரு நபருக்கு இயல்பாக வருவதில்லை. அதற்கான அடிப்படைப் பயிற்சி வீட்டிலேயே செய்யப்பட வேண்டும். அதற்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும். இந்த விடயம் அடுத்த பேச்சுப் புள்ளியுடன் தொடர்புடையது.
எனவே வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் திறன்களைப் பயிற்றுவிக்காமல் குழந்தைகள் வளர்க்கப்பட்டால் அது பெற்றோரின் தவறாகும்.
04. பிள்ளைகளை செல்லமாக வளர்த்தல்
இதுவும் மேற்கூறிய விடயத்துடன் தொடர்புடைய ஒரு விடயம் தான். பிள்ளைகளை உறுப்படியாக வளர்ப்பதற்கு அவர்களை இரானுவ முகாமில் சேர்த்தோ அல்லது வீட்டில் இராணுவ முகாமில் போல் கடும் கட்டுபாடுகளுடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.
ஆனால் பிள்ளைகள் நிஜ உலகில் காலூன்றி நடக்கத் தெரியாத பச்சிளம் குழந்தையாகவே வளர்க்காமல் இருப்பதற்கு பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெில் தன் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுப்பதற்கு பெற்றோர்கள் வாழ்கை முழுதும் உயிருடன் இருக்கப் போவதில்லை.
உதாரணத்திற்கு சிலர் பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் வரை வீட்டை விட்டு வௌியே அழைத்து செல்லவே மாட்டார்கள்.
அப்பிள்ளைகளுக்கு அவசரத்திற்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவதற்கோ, பஸ் வண்டியில் ஏறி குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கோ, வைத்தியசாலைக்கு, பொலிஸ் நிலையத்திற்கு அல்லது முக்கியமான உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கோ வழி தெரியாது.
இவ்வாறு வீட்டில் அடைத்து செல்லமாக வளர்கப்பட்ட பிள்ளை திருமணமாகி சென்றதும் மேல் கூறியது போல் அவசர நிலமைகளின் போது எப்படி முகம் கொடுப்பார்கள்.
அதே போல் ஓர் ஆண் பிள்ளைக்கு அவனது தாய் திருமணமாகும் வரை வீட்டில் காலுக்கும் கைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்து செல்லமாக வளர்தாள் என வைத்துக் கொள்வோம். இப்போது அவன் திருமணமாகி சென்றதன் பின்னர் மனைவி அவனது தாய் செய்ததைப் போல் அவனது அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க வேண்டுமா? அப்படி அனைத்துப் பெண்களும் செய்வார்களா?
இவ்வாறு தாய்மார்களின் அர்தமற்ற செல்லத்தனத்தால் வளர்க்கப்பட்ட ஆண்களின் வாழ்கை சீரழிந்த கதைகள் ஏராளம் காணலாம். அதனால் தான் இந்த தவறை செய்ய வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறுகிறோம்.
05. பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தல்
சில குடும்பங்களில் நாம் பார்க்கிறோம். பிள்ளைகள் சொல்வதை எல்லாம் செய்வதன் மூலம் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பாசத்தைக் காட்டுகிறார்கள். உண்மையில் இது பாசம் தானா?
இவ்வாறு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகளின் மனவலிமையும், தன்னடக்கத் திறனும் மிகக் குறைந்த அளவில் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்துப் பாருங்கள். கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, சொல்வதை எல்லாம் செய்து கொடுத்து பெற்றோர்களால் கெட்டுப்போகும் பிள்ளைகள் நிஜ உலகில் காலடி எடுத்து வைத்த பிறகும் அப்படி வாழ முடியுமா?
எனவே, பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பிள்ளைகள் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுக்காமல், குழந்தைகளுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க வேண்டும். தனக்கு ஏதாவது தேவை எனில் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நியாயமான முறையில் உழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதாவது, நினைத்த நினைத்த நேரத்தில் பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதால் அதன் அருமை, மதிப்பு இல்லாமல் போகின்றது. ஆனால் பிள்ளைகள், ஒரு வேலையை வெற்றிகரமாக முடிக்கும் போது, அதனை பாராட்டும் விதமாக எதையாவது பரிசாகக் கொடுத்தால் அதன் மதிப்பை பிள்ளைகள் அதிகமாக உணர்கிறார்கள்.
06. பிள்ளைகளுடன் வேலை செய்வதற்கு குறுக்குவழிகளைக் கண்டறிதல்
இன்றைய காலத்தில் பல பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. நாம் ஏற்கனவே கூறியது போல் பிள்ளைகளை வளர்ப்பது எளிதானது,
ஆனால் அவர்களை சரியான முறையில் வளர்ப்பது எளிதானது அல்ல. அங்கு நீங்கள் எளிதான வழிகளையும் குறுக்கு வழிகளையும் தேடுவது உங்களது வாழ்கைக்கும் பிள்ளைகளின் வாழ்கைக்கும் கெட்டதாக அமையலாம்.
உதாரணத்திற்கு, இன்று பெருப்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவூட்டுவதற்கு, பிள்ளைகளை அமைதியாக ஒரு இடத்தில் வைப்பதற்கு தமது ஸ்மாட் போனில் காட்டூன் அல்லது ஏதாவதொன்றை போட்டு பிள்ளைகளின் கையில் கொடுப்பார்கள்.
இது எளிதான வழி தான். ஆனால் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே டிஜிட்டல் திரைக்கு அடிமையாவதால், மற்ற திறன்களைக் கற்காமல் போவதை, புத்தகத்திற்கு, படிப்பிற்கு பழகாமல் ஆர்வமில்லாமல் இருப்பதை, அந்த எளிதான குறுக்கு வழியுடன் ஒப்பிட முடியுமா?
07. தன்னைப் புறக்கணித்து விட்டு குழந்தைகளை பராமரித்தல்
எமது இளமை காலத்தில் அதாவது நாம் சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, மாதம் ஒருமுறை எங்காவது சுற்றுலா செல்வது. சிறுது காலத்திற்கு ஒரு முறையாவது புது ஆடைகள் வாங்குவது, வீட்டில் இருக்கும் போதும் நேர்தியாக உடையணிந்து வாழ்வது என நாம் எம்மை நன்றாக பார்த்துக் கொண்டோம் என நாம் சொல்வோம்.
பின்னர் திருமணமாகி குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றோம். அதன் பின்னர்..,
விஷேடமாக தாய்மார்களுக்கு மொத்த காலமும் பிள்ளைகளின் வேளைகளிலே கழிந்து விடும். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கங்கள் மறைந்து போகும். பல நாட்களாக ஒரே ஆடையை அணிந்திருப்பார்கள். தனக்கென்று ஒரு ஆடையை வாங்கிய காலம் ஞாபகமிருக்காது. வௌியே சென்று வந்த காலம் ஞாபகமிருக்காது.
எங்காவது போனால் பிள்ளைகள் பட்டினி கிடப்பார்கள் என்று நினைத்து எங்கும் செல்லாமல் இருக்கும் பெரிய பிள்ளைகளை கொண்ட சில தாய்மார்களும் உண்டு.
இவ்வாறு வாழ்வது பிள்ளைகள் மீதான பாசம் கிடையாது. அது தனக்கும் பிள்ளைக்கும் தீங்காக அமையும். பிள்ளைகள் வளரும் போது, பெற்றோர்கள் அவர்களை விட்டு செல்ல பழக வேண்டும் அவர்களை சுயமாக வாழ்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிறார்கள் என்பது அவர்களும் தங்கள் பெற்றோரைப் போலவே பெரியவர்களாக மாறுகிறார்கள் என்பதாகும்.
வளர்ந்த பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதும், வளர்ந்து பெரியர்களாகிய பிள்ளைகளுக்காக தமது வாழ்கையை தியாகம் செய்வதையும் பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் வாழ்க்கையைத் தவிர, உங்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Reezah Jasmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!