– Subail M Noordeen –
பலஸ்தீன் நடந்து கொண்டு இருக்கும் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அல்லது புனித தல மீட்புக்கான இஸ்லாமிய அறப்போராட்டமா?
கடந்த வாரம் இடம்பெற்ற பல வெள்ளிக்கிழமை குத்பாக்களும் இந்த பலஸ்தீன் விவாகரத்தையே பேசியதாக அறிய முடிகிறது.. குறிப்பாக நான் பிரசன்னமாகி இருந்த குத்பாவின் தலைப்பு பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் பைத்துல் மக்திஸ் இன் வரலாறு பற்றியும் அதன் புனிதத்துவம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அடுத்ததாக இஸ்லாமிய வரலாற்றில் யூதர்கள் எவ்வாறு வழிகேட்டில் இருந்தார்கள் என்று கூறப்பட்டது. யூத நஸாறாக்களுடனான உறவை ஏறக்குறைய துண்டித்தே வாழ வேண்டும் என்ற கருத்தை திருகுர்ஆன் வசனங்களை ஆதாரப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், எமது நாட்டு சூழலில் பின்வருமாறு தான் இந்த ஃபலஸ்தீன விவகாரத்தை அணுக வேண்டும் என கூறி முடித்தார்.
1. நாம் இங்கு செய்யும் பாவங்களால் தான் ஃபலஸ்தீன மக்கள் கொத்து கொத்தாக அழிக்கப்படுகின்றனர். ஆகவே முதலில் எங்கள் வாழ்வின் குடும்ப, பொருளாதார, மற்றும் ஏனைய விடயங்களில் பாவம் செய்யாதவர்களாக பாற வேண்டும்.
2. நாட்டு சட்டத்துக்கு அணுவளவேனும் பாதிப்பு இல்லாதவாறு இந்த விடயம் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.
3. ஃபலஸ்தீன விவாகாரத்தை மாற்றுமத சகோதரர்கள் கேள்விக்குட்படுத்தினால் தாம் விரும்பியவாறு கருத்து சொல்லாமல் ஜம்இய்யத்துல் உலமாவிடம் அவர்களை அணுக செய்ய வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு துஆ செய்ய வேண்டும்; அதற்காக ஐவேளை தொழுகையின் போதும் குனூதுன் நாஸிஆ வை ஓத வேண்டும்.
இந்த குத்பாவில் இறுதியாக குறிப்பிடப்பட்ட முதல் இரண்டு அபத்தமான தீர்வுகளையும் ஃபலஸ்தீன் விவகாரம் பற்றிய ஒரு முஸ்லிமின் குழப்பமான அணுகுமுறைக்கு உதாரணமாக கொள்ளலாம் என எண்ணத் தோன்றியது.
Ø இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் பாவங்களில் இருந்து விலகி கொண்டால் ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன நிலங்கள் மீட்கப்படுமா? ஆக உலகின் ஒரு பாகத்தில் உள்ள மக்கள் செய்யும் பாவங்களுக்காக இன்னொரு இடத்தில் வாழும் மக்களை இறைவன் தண்டிப்பான் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்?
Ø ஒரு வேளை இலங்கை அரசாங்கம் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் இந்த போதகர்கள் என்ன கூறுவார்கள்? இஸ்ரேலுக்கெதிராக எழுதுவதும் பேசுவதும் ஏன் சிந்திப்பதும் கூடாது என்று தீர்ப்பு வழங்குவார்களா?
இலங்கையர்களாகிய நாங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக வழிமுறையில் தான் சரி என காணும் கருத்தை முன்வைப்பது அனுமதிக்கப்பட்டு தான் உள்ளது. அது அரசாங்கத்தினால் காலத்துக்கு காலம் வகுக்கப்படும் கொள்கை கோட்பாடாக இருப்பினும் கூட என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விவகாரம் பற்றிய தெளிவான நிலைப்பட்டை மக்களுக்கு அறிவூட்டாமல் அல்லது அது பற்றிய தெளிவின்றி அதனை ஏக போகமாக மாற்றுவதில் இலங்கைக்குள் இருக்கும் மார்க்க அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன என்றால் மிகையாகாது.
ஆக இவ்வாறான பொய் சமரச பிரச்சாரங்களால் மாற்று மத சகோதரர்களை கவருவதற்கான உபாயம் ஒன்றே வகுக்கப்படுகிறது தவிர வேறில்லை. இவ்வாறான நிலைப்பாடுகளால் முஸ்லிம்கள் கபடமிக்கவர்கள் என்ற தோற்றப்பாடு மாற்று மதத்தவர்களிடம் விதைக்கப்பட இயலுமாக இருக்கும்.
முற்போக்கு போதனை என்ற எண்ணத்தில் இவ்வாறு போதிக்கும் இந்த போதகர்களில் பலர், தமது உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து இரட்டை நிலைப்பாடுகளையே பல வேளைகளில் எடுப்பதனை வாடிக்கை ஆக்கி கொண்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் டாலர் பற்றாக்குறையினால் இலங்கை மத்திய வங்கி டாலர் பரிவர்த்தனையை தடை செய்திருந்தது. ஆனாலும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டி மத்திய வங்கி செயலாளரை அணுகிய எமது நாட்டு முஸ்லிம்கள் ஒரு ஹாஜிக்கு அண்ணளவாக செலவாகும் 3500 டாலருக்கு பதிலாக வெறும் 1500 டாலர்களே செலவாகும் என பொய் சொல்லி அனுமதி பெற்றனர்.
பின்னர் பொருளாதார நெருக்கடி நிலையை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்நியச் செலாவணியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் மூலமே ஹஜ் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.
அந்த வேளை இது பற்றி இந்த போதகர்கள் மெளனிகளாகவே இருந்தனர்; ஆனால் ஃபலஸ்தீன விவகாரத்தில் நாட்டு சட்டம் முக்கியம் என்பர். உம்றா கிரியைக்காக மட்டுமே புனித கஃபாவை மக்கள் தவாஃபு செய்ய முடியும் என்ற விதிமுறையை ஹறமைன் நிருவாகம் சனநெரிசலை கட்டுப்படுத்த காலத்துக்கு காலம் அமுல் செயவது வழமை.
ஆனால் அதனை மீறி உபரியான தவாஃப்களை மேற்கொள்வதற்காக பொய்யாக இஹ்றாம் அணிந்து தவாஃபினை மேற்கொள்வது பலரது வாடிக்கை. இது பற்றி இந்த போதகர்களிடம் கேட்கப்பட்ட போது அது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் தான் ஆனால் மார்க்கத்தில் பாவமில்லை என்றனர். ஏன் அது இலங்கையல்ல வெளிநாடு என்பதாலா?
ஆனால் ஃபலஸ்தீன விவகாரத்தில் நாட்டு சட்டங்கள் முக்கியம் என்பர். அரச அனுமதி இன்றி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் அல்லது கொண்டு வரப்படும் தங்கம் தனது சொந்த பணத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டது என்று நியாயம் கற்பித்து நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள தங்க கடத்தல்களுக்கு ஹலாலாக்க முடியுமா?;
நாட்டு சட்டப்படி தான் குற்றம் ஆனால் மார்க்கத்தில் ஹறாமில்லை என இவர்கள் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இவ்வாறு முஸ்லிம்களின் பல வர்த்தகங்களில் நாட்டு சட்டம் பின்பற்றப்படுவது மார்க்க கடமை என துணிந்து தீர்ப்பு சொல்ல முன்வருவதற்கு இவ்வாறான மத போதகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இஸ்லாமிய ஆட்சி என்றால் மட்டுந் தான் அது தைரியமாக எடுத்துரைக்கப்படுமா?
Ø இவை எல்லாவற்றுக்கும் முதலில் இந்த விவகாரம் உலக முஸ்லிம்களுக்கு மிக உரித்தான போராட்டமாக எதன் அடிப்படையில் அமைகிறது என்பதை பிரித்தறிய வேண்டி உள்ளது. முஸ்லிம்களின் புனித இடமான பைத்துல் மக்திஸ் ஃபலஸ்தீனில் இருப்பதனாலா? அல்லது மானுட இனம் ஒன்று அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டு அத்துமீறப்படுவதனை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கிலா? என்பதில் தெளிவு பெற வேண்டும்.
Ø நபி பெருமானார் அவர்கள் தனக்கு நபித்துவம் கிடைக்கப் பெற்ற கையோடு மக்காவில் ஆட்சியில் இருந்த கோத்திரங்களோடு யுத்தம் செய்து இஸ்லாத்தை பரப்ப முனையவில்லை. நபிகளாரை பின்பற்றிய மக்கள் தொகையின் சொட்பமும் செல்வாக்கற்ற நிலமையினாலும் குறைஷிகளின் அத்தனை அட்டூழியங்களையும் பொறுமை காத்தே வந்தார்.
Ø மதீனா நகரில் நபிகளாருக்கும் அவருடைய கூட்டத்தாருக்கும் பாதுகாப்பும் அவர்களை மதீனத்து மக்கள் என்ற அங்கீகாரம் தருவதாக அங்கே இருந்த 12 கோத்திரங்களும் தமக்கிடையிலான பிளவின் மத்தியஸ்தத்துக்காக நபிகளாரை வேண்டி அழைப்பு விடுத்ததன் பிற்பாடு தான் பிறந்த மக்கா மண்ணை துறந்து நபிகளார் மதீனா சென்றார்கள்.
20 குழுக்களை கொண்ட யூத பழங்குடியினர், 33 குழுக்களை கொண்ட மதீனத்து இரு பெரும் அறபு பழங்குடியின் எட்டு கோத்திரங்கள் மற்றும் மக்காவிலிருந்து மதீனா சென்ற முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய மீதாகுல் மதீனா எனும் மதீனா ஒப்பந்தம் மூலமாகவ இஸ்லாமிய ஆட்சியின் துவக்கம் அமைந்தது என்பது வரலாறு ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு வருடத்தின் பின் மக்கள் எண்ணிக்கையில் விஸ்தீரனத்துக்கு உட்பட்ட நபிகளாரின் மதீனத்து நிருவாகம், இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் வலுவான அரசாக மாற்றம் பெற்றது.. மட்டுமல்ல முஸ்லிம்களின் கிப்லாவாக இருந்த மஸ்ஜிதுல் அக்ஸா, ஹிஜ்ரத் சென்று இரண்டு வருடங்களின் பின் புனித கஃபாவாக இறைவனால் மாற்றப்பட்டும் இருந்தது.
Ø அதன் பின்னர் கூட தனது பூர்வீகமான மக்கா நகருக்கு தடாலாக சென்று குறைஷிகளிடம் இருந்து மக்காவையோ புனித கஃபாவையோ மீட்க முயலவில்லை. மக்காவை பூர்வீகமாக கொண்ட தோழர்களில் கிட்டத்தட்ட அனைவரும் மக்கா மண்ணை தரிசிக்க பேராவல் கொண்டு அதனை பல தடவைகள் நபிகளாருக்கும் எடுத்துரைத்தனர்.
வலுவான அரசொன்றை அமைத்து ஒரு வருடமாகிய பின்னரும் புனித கஃபா கிப்லாவாக மாற்றப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்ததன் பிற்பாடும் தான் தனது பூர்வீகமான மக்காவுக்கு செல்ல ஆயத்தமானார். மக்கா எல்லை வரை சென்ற நபிகளாரையும் அவர் கூட்டத்தையும் குறைஷியர்கள் தடுத்தும் அவர்களுக்கெதிராக யுத்தம் செய்யவில்லை.
மாறாக 10 வருடங்கள் செல்லுபடியாகும் ஹுதைபியா உடன்படிக்கையை அவரது அரசாட்சியை ஏற்ற மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்கா குறைஷிகளுடன் மேற் கொண்டார்.
இரண்டு வருடங்களில், அந்த உடன்படிக்கையை குறைஷிகள் மீறியதன் பின்னர் தான் நபிகளார் அவர்கள் குறைஷிகளுடன் போரிட்டாரே அன்றி கஃபாவின் புனிதத்துக்காக அதனை மீட்க போரிட்டார் என்று பொருள்படுத்துவது வரலாற்று ரீதியாக பொருத்தமன்று.
இஸ்லாமியர்களின் முதல் புனித இடமான புனித கஃபாவை விட்டு விட்டு இரண்டாம் புனித தலமான மதீனாவையே தொடரந்தும் தமது ஆட்சியின் தலைமை பீடமாக நபிகளார் அமைத்து கொண்டது இதற்கு சான்றாகும்.
ஹுதைபியா ஒப்பந்தம் என்பது நபிகளார் தீட்டிய புத்துசாதூரியமான அரசியல் திட்டம் என தட்டையாக விளக்கம் கொடுப்பதன் மூலம் கஃபாவை கைப்பற்றுவது தான் நபிகளாரின் முழு எண்ணமாக இருந்தது என நிரூபிக்க முனைவது வரலாற்று திரிபாகவே பார்க்கப்பட வேண்டும். புனித கஃபாவை மீட்கவே மதீனத்தை ஆட்சி செய்த நபிகளார் மக்கா வந்தார் என்று வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லை.
மக்காவை செழித்தோங்க செய்ய கோரி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் மேற்கொண்ட பிரார்த்தனையின் வெளிப்பாட்டினை இறைவன் அடைய செய்ய வகுத்த திட்டமாக தான் இந்த ஒப்பந்தமும் குறைஷிகளின் ஒப்பந்த மீறலும் பார்க்கப்படுவது சரியானதாக இருக்க முடியும்.
அன்றைய அரசாங்களின் நில விஸ்தீரனம் வாளேந்திய யுத்தங்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கையில் இஸ்லாமிய அரசின் நில விஸ்தீரனமோ சாத்வீக ஒப்பந்தங்கள் மூலம் நிறுவப்பட்டது என்பதை உலகுக்கு பறைசாற்றுகிறது.
Ø மக்கா வெற்றியின் பின்னர், ரோமர்களின் ஆட்சியில் இருந்த அல் அக்ஸாவை வெற்றி கொள்ள நபிகளார் பிரயத்தனம் செய்யவில்லை. புனித இடங்களை மீட்பது இஸ்லாமிய கடமை என்றால் அதனை முதலில் செய்வது நபிகளாராக தானே இருப்பார்கள்.?
மாறாக அகிம்சை வழியில் இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்ட நபிகளார், ரோம புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துச் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர் அஸ்தி’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவன் வழிமறித்துக் கொன்று விட்டான்.
அதற்குப் பழிவாங்குவதற்காக நபி (ஸல்) ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையில் படை ஒன்றை அனுப்பினார்கள். இவர்கள் ‘முஃதா’ என்ற இடத்தில் ரோமர்களுடன் கடுமையாகச் சண்டையிட்டு முஸ்லிம்களின் படைபலத்தை நிருபணம் செய்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ரோம இராச்சியத்துக்கு ஏற்பட்ட அவமானத்தை பழிதீர்க்க நபிகளாரின் ஆட்சிக்கு குடைச்சசல் கொடுத்து சீண்டி கொண்டிருந்த பைசாந்தியர்களுக்கு எதிராக நபிகளார் தமது படையை திரட்டி தபூக் எனும் இடத்திற்கு சொன்று யுத்தம் செய்ய புறப்பட்டார். ஆனால் புனித இடமான அல் அக்ஸாவை மீட்பதற்கல்ல.
Ø பின்னர், கலீஃபா அபூபக்கர் அவர்கள் கூட அல் அக்ஸாவை வெற்றி கொள்ள பிரயத்தனம் செய்யவில்லை. ஆனால் மத்திய தரைக்கடலின் அமைந்திருந்த ரோம பைசாந்திய இராச்சியத்தின் மீதான ஊடுருவலை மட்டுமே அவர் ஆரம்பித்து வைத்தார்; அது, இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித இடமான அல் அக்ஸாவை மீட்பதற்காக தான் என்ற வரலாறு சான்று ஏதும் இல்லை.
Ø இஸ்லாமிய ஆட்சி வரலாற்றில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை வெற்றி கொண்டதாக அறியப்படும் கலீஃபா உமர் அவர்களே ஷாம் பிரதேசத்தை வெற்றி கொள்ளும் போது இந்த புனித இடமான அல் அக்ஸாவையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் என்பது தான் வரலாறு.
புனித இடம் என்பதனால் தான் அல் அக்ஸா கைப்பற்றப்பட்டது என்பதல்ல; மாறாக அன்றைய கால அரசாட்சி முறை அங்கீகரித்த ஒரு அரசின் நில விஸ்தீரண முறைமையே அது.
கலீஃபா உமர் மற்றும் ஜெரூசலத்தின் தலைமை பீடாதிபதி சோப்ரோனியஸ் மற்றும் சில முஸ்லீம் படைகளின் தளபதிகளுடனும் உமருடைய ஒப்பந்தம் என்ற ஒன்று ஜெரூசலத்தில் கைச்சாத்திடப்பட்டது.
சிறுபான்மை மக்களது பாதுகாப்பு, அவர்களின் மத தலங்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார இணக்கப்பாடு, புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்காத மக்களின் அமைதியான வெளியேற்றுத்துக்கான அவகாசம் என்பவற்றை உள்ளடக்கிய உமருடைய ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் மூலமாகவே அமீருல் முஃமினீன் அவர்கள் ஆட்சி செய்தார்கள்.
ஒரு இடம் கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்து தமக்கெதிராக போராடிய மக்களின் மேல் அநியாயங்களை கட்டவிழ்த்து விடுவதை அதுவரை வழமையாக கொண்ட ஷாம் மக்களுக்கு இந்த ஒப்பந்தம் வியப்பையும் இஸ்லாத்தின் பால் நலலெண்ணத்தையும் கொண்டு சேர்த்தது.
பின்ர், கிறிஸ்தவர்களை வெறுப்பேற்ற அசுத்தம் செய்யப்பட்ட அல் அக்ஸாவை சுத்தம் செய்து அவர்களது மத வழிபாட்டுக்கும் கலீஃபா உமர் அவர்கள் அனுமதி அளித்திருந்தார். பின் அங்கிருந்த சூறுபான்மையினரின் ஆலயங்களில் தொழுவதை விட்டும் தவிர்ந்து முஸ்லிம்களுக்கென ஒரு தொழுமிடத்தை அந்த புனித பகுதியில் கட்டியதாகவே வரலாறு சான்று பகர்கின்றது.
Ø ஆக, பலமான அரசு இயந்திரம் ஒன்றின் நேர்மையான உருவாக்கத்தின் பின் தான் இஸ்லாமிய ஆட்சிக்கான நில விஸ்தீரணம் இஸ்லாமிய மார்க்கத்தில் சாத்தியமும் அனுமதியும் கூட என்பதை நபிகளாரின் ஆட்சியிலும் நேர்வழி பெற்ற குலஃப உர் றாஷிதீன்களின் ஆட்சியின் வரலாறுகளில் இருந்து அழகாக விளங்கி கொள்ளலாம் அல்லவா?
அதை விட்டு விட்டு கண்டம் கடந்து வாழ்ந்தாலும் அக்ஸா மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக பொங்கி எழுவது தான் மார்க்க பற்றை பறைசாற்றும் என்பது எப்படி நியாயமாகும்.
அல் அக்ஸா கைப்பற்றப்படும் என்ற நபி மொழிக்கு அது கலீஃபா உமர் அவர்களால் நடந்தாயிற்று என்றும் இல்லை இனி மேல் தான் நடந்தேறும் என்றும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அல் அக்ஸாவின் மீட்பினை இறை வணக்கமாகவும் அறப்போராட்டமாகவும் சித்தரிப்பது பெரிய அபத்தம்.
ஒருவேளை, அல் அக்ஸா இனிமேல் தான் கைப்பபற்றப்படும் என்ற கருத்தோடு உடன்பாட்டால் , அதற்காக முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற கட்டாயத்தை விதிப்பது முறையாகுமா? அப்படியானால், பெற்றோர் அடிமைகளாகவும் பிள்ளைகள் எஜமானர்களாகவும் மாறுவது இறுதி நாளின் அடையாளம் என்ற நபி மொழிக்கு அமைவாக பெற்றோரை அடிமையாக்கவோ பிள்ளைகளை எஜமானர்களாக்கவோ போரடவும் வேண்டுமா? இல்லையே!!
இது போன்று இறுதி நாள் பற்றி வந்த நபி மொழிக்காக போராடுவது இறை வணக்கமாகுமா? இல்லையே!
ஆனால் நிலத்தொடர்போ எதுவித அரசியல் தொடர்போ அற்ற எம்மவர்களது போராட்டம் உள்ளத்தால் அமைவதே பொருத்தமாக இருக்கும் . தாம் வாழும் இடத்தின் நியாயாதிக்கத்தையும் பல்லின சூழலின் செரிமானத்தையும் பொறுத்து நாவாலோ அல்லது அதன் எழுத்து வடிவத்தாலோ அடக்குமுறைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை முன்வைக்க முடியும்.. இது ஜனநாயக கட்டமைப்பில் அனுமதிக்கப்பட்டதும் கூட.
இதுவே தான் இறை பார்வையில் எமக்கு கடமையாகவும் ஆகலாமே தவிர பலஸ்தீன மீட்பை அன்றாட கடமையாக்கி இயல்பு வாழ்வை ஸ்தம்பிக்க செய்வது அல்ல.
உண்மையை சொல்லட்டும் … எத்தனை பேர் நமது அயல் வீட்டிலும் குடும்பங்களுக்கு உள்ளும் ஏன் நாம் வாழும் சமுதாயத்திலும் ஏற்படும் பிரச்சினைகளில் உண்மையை கண்டும் அறிந்தும் அதற்காக சாட்சிக்கு அழைக்கப்பட்டால் வம்பு தும்பு வேண்டாம் என்று அவற்றில் நின்றும் தவிர்ந்து கொள்கின்றோம்.
அயல் வீட்டுக்காரன் பின் வீட்டுக் காரனின் காணியை அபகரித்த கதை தெரிந்தும் இணக்க சபை சென்று சாட்சியம் அளிப்பதில் தயக்கம் காட்டுகின்றோம். கேட்டால் , அவர்களது காணி உறுதி பத்திரத்தில் அமைந்துள்ள எல்லைகள் பற்றி எனக்கு தெரியாது என காரணமும் கூறுகின்றோம்.
இவ்வாறான நாமா பாலஸ்தீனத்தினத்தின் மீதான அத்துமீறலுக்கு எதிராக கிளர்ச்சி அடைகிறோம்.? ஏன் சமூக வலைத்தளங்களில் கூட ஒருவர் மீது தமக்கு உடன்பாடான இன்னொருவர் கடுஞ்சொல் உபயோகிக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு
கடுஞ்சொல் உபயோகித்தவருக்கெதிராக பாதிக்கப்பட்டவர் எதிர்வினை ஆற்றும் போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு சமாதானமும் பேச முனைகின்றோம். பாதிக்கப்பட்டவர் அந்த அமைதி கோரிக்கைக்கு உடன்படாவிட்டால் அவரை குழப்பவாதியாகவும் இங்கிதமற்றவராகவும் மாற்றியமைக்கின்றோம்.
இவ்வாறான நாமா ஹமாஸ் என்பவர்கள் திருப்பி அடிப்பது எப்படி தீவிரமாகும் என கேட்கின்றோம்? சற்று சிந்திப்போம்.. இது போன்று அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கும் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக செயற்படுவதே இஸ்லாத்தின் பார்வையில் முற்படுத்தப்பட வேண்டிய கடமை என்பதை நேர்மையாக விளங்கி கொள்வோம்.
அதன் பின்னர் ஃபலஸ்தீன் விவகாரத்தில் தமது எதிர்க்குரல்களை முன்வைக்கலாம். ஆகவே சியோனிஸ ஆக்கிரமிப்புக்கு எதிராக இறைவனை மனமுருகி பிரார்த்திப்பது ஒன்றே குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களின் சிறந்த ஆயுதமாக இருக்கும்.
ஆனால், அவை யாவும் அத்துமீறலுக்கும் அடக்குமுறைக்கும் எதிரானதாக தான் இருக்க வேண்டுமே தவிர மார்க்கத்துக்கு எதிரானதாகவும் புனித இடத்தின் மீட்பாகவும் கற்பிதம் செய்யப்படுவது தவிர்க்கப்படவது தான் இறை வழிகாட்டலாக அமையும்.
1948 மே 15 இல் ஆங்கிலேயர்களால் அத்துமீறப்பட்ட ஃபலஸ்தீன நிலங்கள் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கியது. அதற்கு ஜனநாயக போர்வையும் அமெரிக்கா வல்லரசால் அணிவிக்கப்பட்டது.
விரும்பியோ விரும்பாமலோ ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவம் பெற்று அதன் ஜனநாயக கொள்கையை பின்பற்றி உறுதிபூண்ட நாடுகள் அவர்களின் கொள்கை பிரகடனத்தை ஏற்றுத் தான் ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.
அதன் அடிப்படையில் ஃபலஸ்தீன நில மீட்பு என்பது 1948 இற்கு பின் சியோனிஸத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன நிலங்களையே குறிக்குமே தவிர 1000 ஆண்டுகள் முன்னோக்கி சென்று முழு ஃபலஸ்தீனமும் இஸ்லாமியர்களுக்கானது என்ற கோஷம் இடுவது ஆரோக்கியமல்ல.
அப்படி நாம் கோஷமிடுவது 3000 ஆண்டுகள் முன்னோக்கி சென்று இது யூத நிலம் தான் என ஸியோனிஸ்டுகள் பிரய்த்தனம் செய்யும் நியாயப்படுத்தலுக்கு உரம் ஊட்டுவதாக அமைந்து விடும்.
ஃபலஸ்தீன மக்களை பொறுத்தவரை சியோனிஸ ஆக்கிரமிப்புக்கு எதிராக அற போர் செய்வது நிச்சயம் அவர்களுக்கே உரித்தானது தான். இந்த நிலைப்பாட்டை மார்க்க வழிகாட்டல்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அந்த நிலைப்பாடுகள் சூதானமாக அமுல்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், ஃபலஸ்தீன் மீதான ஸியோனிஸ ஆக்கிரமிப்பை பெரும்பாலும் அனைத்துலகமும் எதிர்க்கின்றனர் தான்; பல யூத மக்கள் கூட. ஆனாலும் அதற்கான தீர்வு நோக்கிய அவர்களது அதிகாரத்தை நீதியின் பக்கம் செலுத்துவதில் 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இழுபறி நிலை நிலவுகிறது.
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல் அக்ஸாவை மீட்பதற்கான போராட்டமாக கருத்துப் பரவலாக்கம் செய்யப்பட்டதும் இதற்கு காரணமாக அமையலாம் என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
ஃபலஸ்தீனத்துக்கு என்று ஒரு அரசாங்கம் இருந்தும் கூட ஆயுத குழுக்கள் ஃபலஸ்தீனத்தின் ஆட்சியை தீர்மானிப்பது ஜனநாயக விரோதமானது என்ற காரணத்தை முன்நிறுத்துகின்றன. அதன் பிரகாரம் தமது ஃபலஸ்தீன நிலைப்பாடுகளை ஜனநாயகத்துக்கு குந்தகம் இன்றி முன்வைக்க கவனம் செலுத்துகிறன இந்த உலக நாடுகள்.
அது அவரவர் தேசத்தின் இறைமையை பொறுத்தது. அவை மனித குலத்துக்கு எதிராக இருந்தாலே அன்றி நாம் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கோஷமிடுவது பொருத்தமற்றது.
அநியாயம் இழைக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சிவில் யுத்தம் ஒன்று ஆயுத குழுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். இந்த ஆயுத குழுக்களோ உலக முஸ்லிம்களின் ஆதரவை வலுப்படுத்த பெரும்பாலும் புனித தல மீட்பு போராட்டமாக இந்த நில மீட்பு போராட்டத்தை மாற்றியமைத்து விட்டனர் என்பது தான் உண்மை.
இந்த ஆயுத குழுக்கள் சார்ந்த மார்க்க அழைப்பு அமைப்புகளும் இதற்கு பக்கபலமாக தமது மார்க்க நிலைப்பாடுகளை நிறுவி உத்வேகம் அளித்து வருகினறனர்.
புனித தல மீட்பு என்று முஸ்லிம் உலகின் ஆதரவை பெற்றாலும் ஜனநாயக வழியில் அமைந்த போர்ட்டமே ஃபலஸ்தீன் நில ஆக்கிரமிப்புக்கு தகுந்த பாடம் புகட்டலாம் என்ற முடிவுக்கு வந்த ஹமாஸ் இயக்கம், ஃபலஸ்தீன தேர்தல் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தனர்.
அதில் அவர்களால் பெறப்பட்ட வெற்றியை கூட தீவிரவாத இய்க்கத்தின் வெற்றி ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என வலல்ரசுளை கொண்ட மத்தியஸ்தங்கள் கபடமாக பிரகடனப்படுத்தியது..காரணம் ஹமாஸ் இன்னும் ஆய்த போர்ட்டத்தை நிறுத்தி கொள்ளவில்லை என்ற காரணம் தான்.
இஸ்லாமிய ஆன்மீக மயப்படுத்தலை தவிர்த்து, வலுவான பிராந்திய அரசியல் ராஜதந்திர கட்டமைப்பை நிறுவுவதன் மூலமே ஃபலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்வுகளை எட்ட முடியுமாக இருக்கலாம்.
மாறாக பிற நாடுகளின் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத உதவிகளால் மட்டும் இந்த நில மீட்பினை சாத்தியப்படுத்தலாம் என்பது வரலாறு நெடுகிலும் தொடர்ந்து இடம்பெற்ற அதே விபரீதமான விளைவுகளையே மீள கொண்டு வந்து சேர்க்கும்.
பலவந்தமாக துண்டாடப்பட்ட பலஸ்தீனின் தெற்கு பகுதியில் நாடொன்றை அமைத்து எடுத்தவர்கள் முஸ்லிம்களை உசுப்பேத்தி யுத்தங்களை அரங்கேற்றுவதிலேயே குறியாக இரருந்தனர் என்பதற்கு வரலாறுகள் சான்று பகர்கின்றன.
போதியளவு போர் கட்டுமானங்கள் அற்ற நிர்க்கதியான பலஸ்தீனை தன்னகத்தே உள்ள சகல விதமான பலங்களையும் வைத்துக் கொண்டு முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமிப்பதற்காகவே தமது ஒவ்வொரு செயற்பாட்டையும் ஸியோனிஸ்டுகள் கவனமாக முன்னெடுத்தனர்.
பலஸ்தீனிலும் அதன் அயல் அநாடுகளிலும் உருவான கிளர்ச்சி இயக்கங்களின் எதிர்வினையாற்றல்கள் அத்தனையும் சியோனிஸ சித்தாந்தம் அயோக்கியத்தனமான மடைமாற்றி இஸ்லாமோஃபோபியா என்ற பீதியை கச்சிதமாக உலகில் நிலைக்கவும் செய்து விட்டனர்.
கிளர்ச்சி இயக்கங்களது போராட்டங்கள் பலவற்றில் சாதூரியமற்ற போக்கு மிகைத்திருந்ததே இதற்கு காரணம் என்ற விமர்சனமும் மறுக்கப்பட முடியாதது தான்.
பலஸ்தீனர்கள் தமது நிலத்தின் மீட்புக்காக போராடுகின்றனர். அறபு நாடுகளோ தமது பிராந்திய அரசியல் ஸ்திரத்தன்மைக்காக போராடுகின்றனர். ஆனால் இலங்கை உட்பட பிற நாட்டு முஸ்லிம் தஃவா இயக்கங்களில் பெரும்பாலானவை தாம் கட்டமைத்த ஃபலஸ்தீன் பற்றிய மார்க்க ரீதியான அணுகுமுறைகளை உயர்த்திப் பிடித்த தமது இயக்க கொள்கையை மேலும் நியாயப்படுத்துவதற்காக இந்த பலஸ்தீன விவகாரத்தை அணுகுகின்றனர் என்ற விமர்சனம் எழுகிறது.
ஆக எந்த போராட்ட வழிமுறை சரி அல்லது பிழை என்பதை ஃபலஸ்தீன் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும். இலங்கையில் இருக்கும் நாம் அதில் கருத்து கூறி வெளிநாட்டு தஃவா அமைப்பின் முகவர் அந்தஸ்தை உறுதிப்படுத்த தேவையில்லை.
இனிமேலேவது, பச்சை நிறமென்றால் இஸ்லாம், பிறை சின்னம் என்றால் முஸ்லிம்கள் அறபு என்றால் குர்ஆன் என்ற வரிசையில் ஃபலஸ்தீன மீட்பு என்றால் அறப்போராட்டம் என்ற உண்ரச்சிவசப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்வோம்.
சமகாலத்தில் உக்ரேன், ஹைற்றி, பர்கினா ஃபாஸோ, யெமென், கொங்கோ போன்ற நாடுகளிலும் தான் அந்நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.. போர் தடயங்களை கொண்ட தென் சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பசி பட்டிணி என்ற மனித குலத்துக்கு எதிரான அவலங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
எமது உணர்ச்சிவசத்தால் இவர்களை பின்னுக்கு தள்ளி ஃபலஸ்தீனம் மட்டுமே அடக்குமுறைக்கு உள்ளான நாடு என்ற தோரணையில் கருத்து தெரிவிப்பது முரண்நகை அல்லவா?
ஏன் எமது நாட்டில் கூட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற சிங்கள தமிழ் இனப் போரும் ஈழம் வேண்டிய தமிழ் ஆயுதக்குழுக்களின் அரசுக்கெதிரான யுத்தமும் ஃபலஸ்தீன விவகாரத்துக்கான முன்மாதிரியாக கொள்ளலாமே!!!
இவ்வாறு உணர்ச்சி வசப்படுபவர்களுக்கும் 2018 ஈஸ்டர் தாக்குலை மேற்கொண்டோருக்கும் இடையில் என்ன பெரிய வித்தியசம் தான் இருந்து விட முடியும்? என எண்ணவும் தோன்றுகிறது..
இவர்கள் இந்த சமூகத்தில் விதைப்பது வெறுப்புணர்வுகளை மட்டுமே தான். எமது நாட்டில் முஸ்லிம் உற்பத்திகளை புறக்கணிக்க சிங்களவர்கள் புரட்சி செய்தால் அது இனவாதம் என்று கூறுகின்றோம்;
அதுவே இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் தூய்மைவாதமாகுமா? மத நல்லிணக்கம் பேசும் இஸ்லாமிய நடுநிலைமை வாதிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
யூதர்களை உள்ளீர்த்து அமைக்கப்பட்ட நபிகளாரின் ஆட்சி தமது கவசத்தை யூதர் ஒருவரிடம் நபிகளார் அடமானம் வைத்த செய்தி, யூத மக்களின் விருந்துபசாரத்தை ஏற்கும் வழமை கொண்டிருந்த நபிகளாரின் அரவணைப்பு எல்லாம் வெறும் வாய்ப்பேச்சுகளாக மட்டுமே மாற்றப்பட்டு அடி மனதில் மத வெறுப்புகளே இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளன.
தற்போதைய உலகில் யூதமும் கிறுஸ்துவமும் அதன் தூய வடிவில் இல்லாதது தான் யூத நஸறாக்களோடு இணங்கி போவதில் சிக்கல் நிலை உள்ளது என்று, யூத நஸறாக்களை தமது பாதுகாவலர்களாக எடுத்து கொள்ள கூடாது என்ற திருமறை வசனத்தை ஆதாரமாக முன்வைத்து வாதம் செய்கின்றனர் எம்மவர்கள்.
இறுதி சுவிசேஷகர் பற்றிய குறிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள தூய வடிவிலான தெளறாத்தையும் இன்ஜீலையும் பின்பற்றுபவர்கள் முஃமீன்களாக தானே இருப்பார்கள். அப்படியானால் வேதம் கொடுக்கப்பட்டவர்களுடனான முஃமீன்களின் திருமண, உணவு சட்டங்கள் திருமறையில் விதந்துரைக்கப்பட்டிருக்காதே!!
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் வரையும் இவ்வாறு தான் பகைமை பாராட்ட வேண்டுமா? அவ்வாறு என்றால் நிகழவிருக்கும் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆட்சியில் யூத கிறிஸ்தவர் எவரும் இருக்க மாட்டார்களா? இப்படி ஏதாவது ஒன்றை எமது மார்க்கம் எதிர்வு கூறியுள்ளதா?
ஆக (அற) போராட்டங்களின் போதான இன மத வெறுப்பற்ற போக்கும், இரட்டை நிலைப்பாடுகள் களையப்பட்ட தெளிவான நிலைப்பாடுகளும் இன்றைய காலத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் போதிக்கப்பட வேண்டிய கட்டாய விடயமாக மாறியுள்ளதனை உணர்ந்து செயற்பட இறைவனை பிரார்த்திப்போம்.
– சுபைல் முஹம்மத் –
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!