மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!

மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்
மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!

தலைமை பொறுப்பு பற்றி வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை வழங்கும் அதே வேளை அந்த தலைமையித்தில் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான நபி (ﷺ) அவர்களின் வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.

மஸ்ஜித் தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்புகள்   :

01. தக்வா

தலைவரிடம் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பின் கீழ் உள்ள மக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு அமைய இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம், எண்னம் உள்ளவராகவும் தன் கடமைக்குரிய செயல்களுக்கான கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் இருக்க வேண்டும்.

02. அறிவு

வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டல் எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலத்திற்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராக இருத்தல் வேண்டும்.

மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகள், நடைமுறைகள் பற்றியும் விரிவான அறிவு கொண்டவராக இருத்தலின் அவசியத்தை பற்றி உமர்  (رضي الله عنه)  அவர்கள் குறிப்பிடுகையில் “இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்று ஜாஹிலிய்யாவை பற்றி அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

03. உறுதி கொண்ட நெஞ்சம்

“அல்லாஹ்விற்கு (ﷻ) மிக விருப்பமான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக அதனை செய்வதாகும்” (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கு அமைய தான் எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு (ﷻ) உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் அதை செய்து முடிக்கக் கூடிய திறன், தைரியம் உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.

எத்தனை எதிர்ப்புகள் தடைகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் தைரியம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.

04. நிலைமைகளை கணிக்கும் திறன்

தனது பலம், பலவீனம், நிலைமைகள் பற்றி இஸ்லாமிய தலைமை அறிந்து, தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டும்.

பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போல் தெரியாவிட்டாலும் தொலை நோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை, இலக்கைக் கொண்டு செயல்பட வேண்டும்.

05. நீதி செலுத்துதல்

தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், நட்பு, செல்வாக்கு, அதிகாரங்களுக்கு பணியாமல் சரியான முறையில் நேர்மையாக நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

“மக்களில் ஒரு கூட்டத்தினர் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (அல்குர்ஆன் 5:8)

06. பொறுமை, வீரம், திடவுறுதி

இம்மூன்று பண்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும்.

இஸ்லாமிய மார்க்கமானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பணி என்பதால் பல்வேறு குறுக்கீடுகள், இடையூருகள் வரும்.  தடங்கல்களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் நிதானமாக பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.

07. பொது அறிவு திறன்

இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ﷺ) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புறிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலைகளைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புறிந்து கொண்டு, வேலைகளை, பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

தமது எண்ணங்களையம்,  கொள்கைகளையும், திட்டங்களையும் மக்கள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு “சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்” எனும் இறை வசனத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராக இருத்தல் வேண்டும்.

08. சேவை மனப்பான்மை

“சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கு அமைய சேவை மனப்பான்மை கொண்டவராக தலைவர் திகழ்தல் வேண்டும்.

09. ஷூரா

தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல் இறையச்சமும் கல்வி அறிவும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும்.

“இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொறு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்” (ஷூரா 38)

“அனைத்து காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக” (ஆல இம்ரான்- 159)

– Mohideen Kadhar –


Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!