தைவான் நாட்டில், ஃபுங் – வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் – வாங் புயல், கடந்த 9ஆம் திகதி பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது. சுமார் 1,800 கி.மீ. அகலமுடைய பயங்கர புயலான ஃபுங் – வாங், மணிக்கு 185 முதல் 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்தப் புயலால், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தைவான் நாட்டை நோக்கி நகர்ந்து வரும், ஃபுங் – வாங் புயலால் மணிக்கு 108 முதல் 137 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக, தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல், நாளை மாலை அல்லது நாளை மறுநாள் அதிகாலை தைவானின் வடகிழக்கு பகுதி வழியாகக் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தைவானில் உள்ள முக்கிய மாகாணங்களில் பாடசாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான நகரங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஃபுங் – வாங் புயலால் சீனாவின் தென்கிழக்கு ஃபுஜியான், குவாங்டோங், ஸெஜியாங் மற்றும் ஹைனான் ஆகிய மாகாணங்களில் அவசரகால புயல் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
