கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் நேற்று (23) தெரிவித்தன.

தற்போது நிலவி வரும் கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானாவின் வருவாய் அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிலவி வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ளூராட்சி அமைப்பு 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, தீவிரமடைந்து வரும் வெப்ப அலை நிலவரங்களுக்கு மத்தியில் தெலுங்கானா அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், வெப்பத்தாக்குதல் காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் டிஜிட்டல் செய்தித் தளமான ஈடிவி பாரத் நேற்று தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு மாநிலங்களிலும், மக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளவர்கள், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

நன்றி

Leave a Reply