ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் அமைதி ஒப்பந்தம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வொஷிங்டனும் ஈரானும் பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தி எட்டியுள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
மூன்று மாதப் போரில் ஒரு திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பெப்ரவரியில் ஈரான் மீது போரைத் தொடங்கியதிலிருந்து, மூடப்பட்டதன் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்திய முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை இந்த ஒப்பந்தம் மீண்டும் திறக்கும் என்று ட்ரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
எனினும், அந்த ஒப்பந்தத்தில் வேறு என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்படும் என்பதை அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை.
ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவை விரைவில் அறிவிக்கப்படும் என்று ட்ரம்ப் சனிக்கிழமையன்று (23) தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.
ஒரு உடன்பாட்டிற்கு வழிவகுக்கக்கூடிய அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பல மாத கால சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், நீர்வழியை விரைவில் மீண்டும் திறப்பதற்கும், ஈரான் மீதான அமெரிக்கத் தடையை நீக்குவதற்கும் ஒரு கட்டம் கட்டமான கட்டமைப்பை வகுக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஈரானின் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன.
வொஷிங்டன் கைவிடுமாறு வலியுறுத்தி வரும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு தொடர்பான திட்டங்கள், 30 முதல் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கைகள் கூறின.
இதேவேளை, இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று மேலும் செய்திகள் வரக்கூடும் என்றும், சில மணி நேரங்களுக்குள் நீரிணைப் பகுதியில் நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தால், அது இறுதி ஒப்புதலுக்காக உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனிக்கு அனுப்பப்படும் என்று ஒரு மூத்த ஈரானிய வட்டாரம் கூறியுள்ளது.
ஆனால், ஒப்பந்தத்தில் ஒன்று அல்லது இரண்டு சரத்துகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தினால், இறுதி உடன்பாடு ஏற்படாது என்று ஓர் வட்டாரம் கூறியதாக தஸ்னிம் மேற்கோள் காட்டியுள்ளது.
