பொதுவாக யாருக்கும் நடக்கக் கூடாது என்று நாம் நினைக்கும் விடயங்கள் உள்ளது. உதாரணமாக, எவரது வீடுகளுக்கும் திருடர்கள் வந்து விடக்கூடாது என நாம் நினைக்கிறோம்.
ஆனால் நாம் இப்படி நினைக்கிறோம் என்று திருடர்கள் தமது திருட்டை நிறுத்தப் போவதுமில்லை.
ஒரு திருடன் அல்லது திருடர்கள் கும்பல் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் போது என்ன செய்வது என்று பலருக்கும் தெரியவில்லை.
சிலர் அந் நேரத்தில் பயத்துடன் இருப்பார்கள், சிலருக்கு என்ன செய்வதென்று புரியாமல் பதற்றத்துடன் இருப்பார்கள், இன்னும் சிலர் திருடனிடம் ஹீரோயிசம் காட்டப் போவார்கள்.
எனவே நாம் தூங்கும்போதோ, அல்லது வீட்டில் இல்லாதபோதோ திருடர்கள் வந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் செல்வது வேறு விடயம்.
ஆனால் நாம் வீட்டில் இருக்கும்போது, அல்லது நாம் விழித்துக் கொண்டு, திருடர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் திருடர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதைப் பொறுத்து, நிலைமை நாம் நினைப்பதை விட மிகவும் தீவிரமாகவும் அமையலாம்.
அந் நேரத்தில் நம்முடைய நடவடிக்கைகள் காரணமாக, எமக்கு அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு திருடர்களால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், சில நேரம் மரணம் கூட வரலாம்.
அதனால்தான், ஒரு திருடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், என்ன செய்வது என்று முன் யோசனையுடன் இருக்க வேண்டும். அதற்கான சில அறிவுருத்தல்கள் இதோ.
1. திருடன் வீட்டிற்குள் நுழைந்தால் பதற்றமடைய வேண்டாம்
ஒரு திருடன் வீட்டிற்குள் நுழைந்தால் பதற்றமடையாமல் இருக்க முடியுமா? பதற்றமும் பீதியும் தானே முதலில் வருகிறது? ஆனால் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியது பதற்றமடையாமல் இருப்பது தான்.
ஏன் அப்படி சொல்கிறோம என்றால்? ஒரு திருடன் வீட்டிற்குள் நுழைந்தால் முதன்மையாக கவனிப்பட வேண்டியது தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பை தான்.
நாம் பதற்றமடைந்தால் வீட்டி இருப்பவர்களும் பதற்றமடைந்து திருடனும் பதற்றமடைவான். இதனால் எமக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் பதற்றமடைய வேண்டாம் என்று கூறுகின்றோம்.
இரண்டாவதாக, நாம் பதற்றமடையவில்லை என்றால், பெரும்பாலும் நாம் விழித்திருப்பது திருடனுக்குத் தெரியாது. அதன் மூலம், திருடனை அடையாளம் கண்டு, திருடனின் நடவடிக்கையைப் பற்றி அறிந்து கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதை திட்டமிடலாம்.
2. ஹீரோவாக வேண்டாம்
இது கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம். ஹீரோயிசம் காட்ட செல்ல வேண்டாம். ஏனெனில், இது போன்ற தருணத்தில் நமக்கு முக்கியமானதாக இருக்க வேண்டியது உயிர்.
குறிப்பாக திருடர்களிடம் என்ன ஆயுதங்கள் உள்ளன என்று தெரியாமல், ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்கள் இருப்பதைப் பார்த்தால், ஹீரோவாகவே வேண்டாம். ஏனென்றால், ஒரு குச்சி, ஒரு கத்தி, ஒரு தோட்டா நம் வாழ்க்கையை முடிக்க போதுமானது.
ஆதலால், திருடனையோ, திருடர்களையோ கட்டுப்படுத்த முடியும் என்பதில் 100% உறுதியாக தெரியவில்லை என்றால், வீட்டிற்குள் நுழைந்தவர்கள் சொல்வதைச் செய்யுங்கள்.
இப்போது வீட்டுக்கு வந்த திருடனை ஏன் ஆதரிக்கிறீர்கள் அவன் சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என்று கேட்காதீர்கள். இல்லாவிட்டால், நமக்கு தான் பாதிப்பு இதனால் உடலுக்கோ உயிருக்கோ ஆபத்து ஏற்படலாம்.
3. உங்களால் ஒழிந்து கொள்ள முடியுமென்றால்
திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தால், அவர்களுடன் நீங்கள் சண்டையிடலாம் என்று உங்களுக்கு 100% உறுதியாக தெரியவில்லை என்றால், குறிப்பாக அவர்கள் உங்களைப் பார்க்கவில்லை என்றால், மிக முக்கியமான விஷயம் ஒழிந்து கொள்வது தான்.
குறிப்பாக நாம் தனியாக இல்லை என்றால், நம் குடும்ப உறுப்பினர்களும் நம்முடன் இருந்தால், அப்படி எங்காவது ஒழிந்து கொள்வது தான் மிகவும் அறிவுள்ள செயல்.
ஏனென்றால் வீட்டிற்குள் நுழைந்த திருடனின் முக்கிய நோக்கம் ஏதாவது சில மதிப்புமிக்க பொருட்களை எடுத்து செல்வது. நமக்கு ஆபத்து உண்டாக்குவது அவர்களின் நோக்கமாக இருக்காது.
ஆனால், வீட்டிற்குள் நுழைந்த திருடன் அல்லது திருடர்கள் பதற்றமடைந்தாலோ, அல்லது நாம் அவர்களை பார்ததால் அவர்களை அடையாளம் கண்டு விடுவோம் என்று அவர்கள் நினைத்தால் அங்கே திருடர்களால் எமக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நாம் ஒளிந்து கொள்ள முடிந்தால், நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறைவு.
4. முடிந்தால் மட்டும் பிடிப்போம்
மேலே இரண்டு முறை கூறியது போல், திருடனையோ, திருடர்களையோ கட்டுப்படுத்த முடியும் என்பதில் நீங்கள் 100% உறுதியாக இருந்தால் மட்டுமே திருடர்களைப் பிடிக்க முன்வர வேண்டும். இதில் உங்களின் உறுதி 99% ஆக இருந்தாலும் ஹீரோவாகப் போகாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் பதற்றத்துடன் இருப்பவர்கள் எதையும் செய்ய முற்படுவார்கள். ஆனால் பொதுவாக வீடுகளுக்கு புகுந்து திருடும் ஒரு திருடனின் முக்கிய நோக்கம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதுதான். அப்போது அதிக ரிஸ்க் இல்லாமல் திருடனைப் பிடிக்க வேண்டும்.
இப்போது வீட்டிற்குள் புகுந்த திருடனை எப்படிப் பிடிப்பது? பொதுவாக வீட்டில் அவசரத்திற்கு என்று ஒரு தடி, ஒரு கத்தி, ஒரு வாள் போன்ற ஆயுதம் இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற ஆயுதத்தைக் காட்டி திருடனைக் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், உங்களுக்குதற்காப்பு முறைகள் பற்றிய அடிப்படை புரிதல் இருந்தால் பரவாயில்லை. அதைத் தவிர, ஒரு திருடனுக்குக் கூட உயிரிழப்பையோ அல்லது கடுமையான சேதத்தையோ ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்.
வேறு எந்த வழியும் இல்லை என்றால், நீங்கள் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தலாம்.
5. அயலவர்களின் உதவி
பொதுவாக திருடர்கள் வரும்போது, நாம் வீட்டிற்கு வெளியே இருந்தால் அல்லது எமக்கு வீட்டை விட்டு வெளியேற முடியுமாக இருந்தால் அல்லது திருடன் வீட்டை விட்டு வெளியேறியவுடன் எமக்கு வீட்டிற்கு வௌியே வந்து, உதவிக்காக கூச்சலிடுவதுதான் சிறந்தது.
அதிலும் கிராமம் போல அருகருகே வீடுகள் இருக்கும் இடத்தில் இப்படி உதவி கேட்டால் அக்கம் பக்கத்தினர் உடனே வருவார்கள். பல சமயங்களில் அக்கம்பக்கத்தினர் ஒன்று சேர்ந்து திருடர்களை மடக்கிப் பிடித்த சம்பவங்களும் உண்டு.
ஆதலால், திருடனோ, திருடர்களோ நமக்குக் ஆபத்து தரக்கூடிய எல்லையில் இல்லை என்றால், “திருடன் திருடன்” என்று சப்தமிட்டு உதவிக்கு கூப்பிடுவது நல்லது. ஆனால் நாம் சொன்ன முதல் மற்றும் இரண்டாவது விடயங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் இதை செய்ய வேண்டும்.!
6. காவல்துறையினருக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு
இப்போது ஒரு திருடன் பிடிபட்டிருக்கலாம் அல்லது ஒரு திருடன் தப்பித்திருக்கலாம். எப்படியிருந்தாலும், நாங்கள் காவல்துறையைக்கு அறிவிப்போம் அல்லவா?
வீட்டில் திருடர்கள் இருக்கும் போது கூட, திருடர்களுக்கு விளங்காமல் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தால், 119 என்ற எண்ணுக்கு அழைப்பதுதான் சிறந்தது.
அதன்பிறகு, திருடர்களைப் பற்றி அடையாளம் தெரிந்தால், அதனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பொலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் சம்பந்தமான உண்மை விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அடுத்ததாக திருடர்களைப் பிடிக்க காவல்துறைக்கு உதவுவது, கூச்சலிடாமல் இருப்பது, காவல்துறையின் பணிகளில் தலையிடாமல் நடந்து கொள்வது போன்ற விடயங்களில் பொலிசாருக்கு ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
7. முன்கூட்டியே பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்
உண்மையில், இது திருடர்கள் வீட்டில் திருடிச் சென்ற பிறகு செய்ய வேண்டிய விடயம் அல்ல. திருடர்கள் வருவதற்கு முன் செய்ய வேண்டிய விடயங்களாகும். அதாவது, உங்கள் வீட்டிற்கு அதிகபட்ச பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
நீங்கள் இருக்கும் பிரதேசத்தில், இதுபோன்ற திருடர்களின் அச்சுறுத்தல் இல்லாமலும் இருக்கலாம், எனினும் இதனால் வீட்டிற்கு திருடர்கள் வர மாட்டார்கள் என்று கூற முடியாது. எனவே, தூங்கச் செல்வதற்கு முன், வீட்டின் கதவு, ஜன்னல்களை சரியாகப் பூட்டிவிட வேண்டும்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பூட்டுகள் உடைந்திருந்தால், உடனடியாக அவற்றைப் சரி செய்ய வேண்டும். திருடனுக்கு எளிதில் நுழைய முடியும் என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு இடத்தையும் அடைக்க வேண்டும்.
மேலும், உங்கள் விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் பாதுகாப்பாக வைப்பதற்கான வழியைக் கண்டறியவும். அவசரத்திற்கு என்று அருகில் ஆயுதம் ஏதாவது வைத்துக் கொள்வது பரவாயில்லை. இருப்பினும், வீட்டிற்குள் புகுந்த திருடன், திடீரென அவற்றை எடு்க்கக் கூடிய வகையில் ஆயுதங்களை வைத்திருந்தால் அதனால் நமக்கு தீங்கு ஏற்படக் கூடும்.
அதுமட்டுமின்றி, வீடு முழுவதும் உள்ளடங்கும் படி சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது நல்லது.
Reezah Jasmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!