பிரித்தானியாவின் தீர்மானம்  ஒருதலைப்பட்சமானது 

 

இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு  போ் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா  எடுத்த தீர்மானம்  ஒரு தலைப்பட்சமானது  என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் இந்த விவகாரம் தொடா்பான  இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இலங்கையில்  இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக குறிப்பிட்டு முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா  ,  ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு நபர்களுக்கு   தடை விதிப்பதாக  பிாித்தானியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

அதற்கமைய குறித்த நால்வரும்  பிாித்தானியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டிற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என  பிாித்தானியாவின்  இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாகவும்  அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் குறித்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கிடம் வௌிவிவகார அமைச்சில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

The post பிரித்தானியாவின் தீர்மானம்  ஒருதலைப்பட்சமானது  appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!