மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் என்றும் கூறும் இளவரசர் யாகூப், அந்தக் கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக’ அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958இன் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘இச் சட்டத்தின் விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தில் அல்லது அதற்கு அருகில் எந்தவோர் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், மாற்றம், அழிவு அல்லது அகழ்வாராய்ச்சியையும் மேற்கொள்ள முடியாது.
மேலும், இதுபோன்ற எந்தவொரு செயலும் சட்டவிரோதமாகவும் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியதாகவும் கருதப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 1972ஆம் ஆண்டு உலக கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதை மேற்கோள் காட்டி, ‘அத்தகைய நினைவுச்சின்னங்களை அழித்தல், புறக்கணித்தல் அல்லது சட்டவிரோதமாக மாற்றுவது சர்வதேச கடமைகளை மீறுவதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, ஔரங்கசீப்பின் கல்லறைக்கு தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி முழு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ASI -க்கு உத்தரவிடுமாறு அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளார்.