எமது கட்சியின் யாழ் . மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி. அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவி
‘நான் அமைச்சராக இருந்தாலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் மத்தியில் செல்கின்றேன். ஆனால் அவர் எஸ்.டி.எப். பாதுகாப்புடன் வலம் வருகின்றார். இது வெட்கம். இவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி. அநுரவை கால் வைக்க இடமளிக்கமாட்டாராம்.தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளர் கபிலனுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுமாம். வழக்கு தொடுப்பதைதவிர அவருக்கு வேறு என்ன தெரியும்?
கபிலன் சுந்தரமூர்த்தி எமது கட்சியின் முதன்மை வேட்பாளர். அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும். சாக்கடை அரசியலின் வெளிப்படாகவே அவரை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் தமக்கான அரசியல் இருப்பை தேடுகின்றனர். அதனால்தான் போராட்டத்துக்கான அறைகூவல் விடுக்கின்றது. ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும்.
கொழும்பில் கோட்சூட்டுடனும், யாழ்ப்பாணத்தில் வேட்டியுடனும் வலம் வருகின்ற – ரணிலின் கோப்புகளைத் தூக்கி திரிந்த செல்லப் பிள்ளை, அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்றது.
முதலில் தனக்கு கால் வைக்க முடியுமா என்பதை யாழ்ப்பாணத்து மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்நபர் தேடி பார்க்க வேண்டும்.
அதேவேளை, இந்நாட்டின் முன்னாள் போராளிகள் கனவு கண்டிருப்பார்கள். அது புலிகளாக இருக்கலாம், ஈபிடிபியாக இருக்கலாம், ஈபிஆர்எல்எப் ஆக இருக்கலாம். தமிழ் மக்கள் நிம்மதியாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கனவு. அந்த கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியுமா? போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது.
அவர்கள் கனவு கண்டிருந்தாலும்கூட அந்த கனவை நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியையே ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும்.
அதேவேளை, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. உண்மையான உரிமையாளர்கள் இல்லாதபோதுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். இவ் ஊடக சந்திப்பில் நா்டாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் சு.கபிலன் ஆகியோரும் உடனிருந்தனர்.