செம்மணியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (04.07.25) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஒன்பதாம் நாள் பணிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (04.07.25) முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 42 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் 37 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி தொடர்பில் சட்டத்தரணி மணிவண்ணன்
செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது.மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது.
மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது.
உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.
தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.
தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அதற்கான கட்டளை எதிர்வரும் 11ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும்.
செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.
அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும்.
கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.
இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்
The post செம்மணியில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள்! appeared first on Global Tamil News.