திருவோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு | 2 dies in firecracker factory explosion near Thiruvonam

தஞ்சாவூர்: திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்ததுள்ளனர்.

இந்நிலையில், முகமது ரியாஸ் மற்றும் தொழிலாளர்களான சுந்தரராஜன்(60) உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை வழக்கம்போல நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களில் இருவர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுவிட்டனர். சிவசாமி என்பவர் வெளியே நின்று வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, பட்டாசு ஆலைக்குள் இருந்த வெடிகள் திடீரென வெடித்துச் சிதறின. இதைக்கண்ட சிவசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், கட்டிடத்துக்குள் இருந்த முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, கட்டிடம் இடிந்து விழுந்தது.

முகமது ரியாஸ், சுந்தரராஜன்

இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி இருவரின் உடல்களையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து நேரிட்ட இடத்தை தஞ்சாவூர் எம்.பி. முரசொலி, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், எஸ்.பி. ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர்.

அங்கு நாட்டுவெடி அனுமதியின்றி தயாரிக்கப்பட்டது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், வாட்டாடத்திக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சமரத்பீவியை கைது செய்தனர். மேலும், நாட்டுவெடி தயாரிக்க இடத்தை வாடகைக்கு கொடுத்த உரிமையாளர் அண்ணாதுரையை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!