கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக கடந்த 48 மணி நேரத்தில் ஆறு தீவிரவாதிகளின் குடியிருப்புகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதுடன், “பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்பை அகற்றும்” தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மைய நடவடிக்கையில், ஷோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா (Zainapora) பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான அட்னான் ஷாஃபியின் வீடு வெடித்துச் சிதறிக்கப்பட்டது.
இந்த தாக்குதலின் சில மணி நேரங்களுக்கு முன்பு, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான ஃபரூக் அஹமட்டின் குப்ரா நகரில் அமைந்துள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளது.
ஃபரூக்கின் வீட்டோடு, ஏனைய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சொத்துக்களும் குறிவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு தீவிரவாதிகளின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து 4 முதல் 5 பேர் வரையிலான தீவிரவாதிகள் வெளிவந்து, சுற்றுலாப் பயணிகள் மீது AK-47 துப்பாக்கிளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால், 26 பேர் உயிரிழந்தனர்.
2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் நடந்த மிகவும் பேரழிவு தரும் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவானது.
இதேவேளை, மத்திய உள்துறை அமைச்சின் (MHA) உத்தரவைத் தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் வழக்கை, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாகக் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குழுக்கள், சாட்சியங்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகளால் மேற்பார்வையிடப்படும் இந்தக் குழுக்கள், அமைதியான மற்றும் அழகிய பைசரன் பள்ளத்தாக்கில் தங்கள் கண்களுக்கு முன்பாக நடந்த கொடூரமான தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.