மும்பை: நாட்டிலேயே முதல் முறையாக மும்பை-பஞ்சவதி விரைவு ரயிலில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணத்தைத் தவிர இதர வகைகளில் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டத்தை (என்ஐஎன்எப்ஆர்ஐஎஸ்) இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை மண்டல அளவில் அதன் ரயில்வே மேலாளர்களே செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மும்பை-மன்மட் பஞ்சவதி விரைவு ரயிலில் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது புசவால் ரயில்வே மண்டலம் மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா கூட்டு முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ரயிலில் பொருத்தப்பட்ட முதல் ஏடிஎம் ஆகும். ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதும் இந்த ஏடிஎம்மிலிருந்து பயணிகள் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏடிஎம் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பொருத்தப்பட்டிருந்தாலும், அனைத்து பயணிகளும் அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இந்த ஏடிஎம் மூலம் காசோலை மற்றும் கணக்கு விவர அறிக்கைகளை கோரி விண்ணப்பிக்கவும் முடியும். பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து ஏடிஎம் வசதி பிற ரயில்களிலும் ஏற்படுத்தித் தரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.