பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்: திருமாவளவன் திட்டவட்டம் | Thirumavalavan says we will never form an alliance with bjp and pmk

திருச்சி: பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரம், போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது அவசியம்.

ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயகக் கட்சிகள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சுமுகமான உறவைப் பேண வேண்டும். போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறியது கற்பனைவாதம். அவர் கூறுவதுபோல, ஒரு நாட்டை எளிதாக அழித்து, ஒழித்துவிட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் இருக்கிறது. அமைதி தேவை என்பதுதான் மக்களின் விருப்பம். டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!