புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் – நிலாந்தன்.

 

இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம்.புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் கனெக்சை நோக்கி கேட்டார். கனக்ஸ் திரும்பிக் கேட்டார் “நான் துப்பியதால் உனக்கு என்ன வந்தது? நான் யாருடைய முகத்திலும் துப்பவில்லை. நிலத்தில் தானே துப்பினேன்? ” என்று. அன்பு மாஸ்டர் விடவில்லை. “நீ துப்பிய நிலம் பொது நிலம். சுற்றி வர மீன்கள், மரக்கறிகள் விற்கப்படும் இடம். உன்னுடைய துப்பலில் மொய்க்கும் இலையான் இங்குள்ள சாப்பாட்டுப் பொருட்களின் மீதும் மொய்க்கும். எவ்வளவு அசுத்தம்? எவ்வளவு ஆரோக்கியக் கெடுதி?… என்று கூறி கனெக்ஸை சண்டைக்கு இழுத்தார்.

இப்படி இரண்டு பேரும் வாக்குவாதப்பட சந்தைக்கு வந்தவர்கள், சந்தை வியாபாரிகள் என்று அனைவரும் இந்த இரண்டு பேர்களையும் சூழ்ந்து விட்டார்கள். இருவருமே ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புவதில் இருக்கக்கூடிய சுகாதாரக் கேடான விடயங்களை தர்கபூர்வமாக உரையாடத் தொடங்கினார்கள். சூழ்ந்திருந்த மக்கள் இரண்டு பேரையும் விலக்குப் பிடிக்க முயற்சித்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலில் மக்களும் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் தெரிந்தது அது ஒரு நாடகம் என்று. சந்தைக்குள் சுகாதார விழிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கனெக்சும் அன்பு மாஸ்டரும் இணைந்து தயாரித்த நவீன நாடகம் அது.

அன்பு மாஸ்டர் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.போர்க் காலத்திலேயே இறந்து விட்டார்.கனெக்ஸ் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார். நாலாங் கட்ட ஈழப்போரில் உயிர் நீத்தார். இருவரும் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் எதற்காக நாடகமாடினார்களோ அந்த விடயம் இப்பொழுதும்,கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரும் உண்டு. அதுதான் சந்தைக்குள் சுகாதாரச் சீர்கேடுகள்.

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மரக்கறிச் சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதற்குப் பின்புறம் உள்ள சிறிய பாதை சில சமயங்களில் கழிப்பறையாகவும் குப்பைக் கூடையாகவும் காணப்படும்.தமது வீட்டுக் கழிவுகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வீதியில் கொண்டு வந்து போடுகிறார்கள். இத்தனைக்கும் அந்த வீதி வளைவில் ஒரு பாடசாலை உண்டு. சில சமயங்களில் அந்த வேலியோடு நின்று சிறுநீர் கழிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தை வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள்.

இது சந்தைக்கு வெளியே. சந்தைக்கு உள்ளே போனால், அங்கே மரக்கறிகள் பரப்பப்பட்டிருக்கும் அதே தளத்தில்தான் வியாபாரிகள் தமது கால்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.அதாவது விற்கப்படும் பொருட்களை வைப்பதற்கு உயரமான ஏற்பாடு இல்லை.அதனால் வியாபாரிகள் மரக்கறிகளை பரப்பி வைத்திருக்கும் அதே இடத்தில் சிலசமயம் செருப்புக் கால்களோடு இருப்பார்கள். அதே செருப்போடுதான் அவர்கள் கழிப்பறைக்கும் போகிறார்கள். சில வியாபாரிகள் செருப்பைக் கீழே கழட்டி விடுவதுண்டு.

அது மட்டுமல்ல,சந்தையின் மூலை முடுக்குகளில் வெற்றிலைத் துப்பல்களைக் காணலாம்.துப்புவது யார் என்றால் வியாபாரிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும்தான்.சந்தைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் அவ்வாறு துப்புவது குறைவு.பொதுச் சுகாதாரச் சட்டத்தின்படி பொது இடங்களில் துப்புவது சட்ட விரோதமானது.ஆனால் அதை சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. ஏனென்றால் அது ஒரு பண்பாடு.அவ்வாறு துப்பாமல் விடுவதனை ஒரு பண்பாடாக மாற்ற வேண்டும். யார் மாற்றுவது ?

யாழ் நகரப் பகுதியை அண்டியுள்ள சந்தைகளில் கல்வியங்காட்டுச் சந்தை தொடர்பாக முறைப்பாடுகள் அதிகம். அந்த சந்தைக்கு ஒரு சாதிப் பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.அங்கு வாங்கிய மீனில் ரசாயன வாடை வீசுவதாக திருப்பிக் கொடுத்தவர்கள் உண்டு.பொதுச் சுகாதாரப் பரிசோதர்களிடம் முறைப்பாடு செய்தவர்களும் உண்டு. ஒரு முறை அவ்வாறு முறைப்பாடு செய்த போது பிஎச்ஐ சொன்னார் அந்த ரசாயனத்தை சோதிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் இங்கு யாழ்ப்பாணத்தில் இல்லை.அதனால் அந்த மீனை அனுராதபுரத்துக்கு அனுப்பி எடுக்க வேண்டும்.அதுவரை அந்த மீனைக் கெடாமல் வைத்திருக்கவும் வேண்டும் என்று.

கல்வியங்காட்டுச் சந்தையில் வாங்கிய மீனில் ஃபோமலின் வாடை வீசியதாக முறைப்பாடுகள் உண்டு.ஓர் ஆசிரியர் சொன்னார்,அவர் வாங்கிய மீனில் அவ்வாறு ஃபோமலின் வாடை வீசியதாகவும்,எனவே அந்த மீனைக் கொண்டு போய் குறிப்பிட்ட வியாபாரியிடம் கொடுத்து “நீ ஏமாற்றி விட்டாய்” என்று ஆத்திரப்பட்ட பொழுது,அந்த வியாபாரி சொன்னாராம் இந்த மீனைத்தான் கூலர் வியாபாரிகள் நூற்றுக்கணக்கான கிலோக்கள் வாங்குகிறார்கள்.நீங்கள் ஒரு கிலோ வாங்கி விட்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று. இதை இவ்வாறு எழுதுவதன் பொருள் யாழ்ப்பாணத்தின் ஏனைய சந்தைகளில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதல்ல.மேலும் கல்வியங்காட்டுச் சந்தையில் உள்ள எல்லாருமே ரசாயனம் கலந்து மீனை விற்கிறார்கள் என்ற பொருளிலும் அல்ல.

இப்படித்தான் இருக்கிறது பொதுச் சந்தைகளில் சுகாதாரம். இப்பொழுது புதிய உள்ளூராட்சி சபைகள் வந்துவிட்டன. மேற்சொன்ன விடயங்களில் உள்ளூராட்சி சபைகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன ?

குப்பை ஒரு தீராப் பிரச்சனை.சந்தைச் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல பெரும்பாலான வீதிகளில் குப்பை ஒரு பிரச்சினை.குப்பை அள்ளும் வாகனம் வராத நாட்களில் மதில்களில் குப்பைப் பைகள் தொங்கும். ஏனெனில்,கீழே வைத்தால் கட்டாக்காலி நாய்கள் பைகளைக் குதறி விடும். சில மறைவான வீதித் திருப்பங்களை அந்த ஊர் மக்களே தற்காலிக குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.அங்கு குப்பை கொட்டவேண்டாம் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டிருக்கும்.அல்லது அந்த மதிலுக்கு அல்லது வேலிக்குச் சொந்தமான வீட்டுக்காரர்கள் அவ்வாறான அறிவிப்புககளை ஒட்டியிருப்பார்கள்.எனினும், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு குப்பைகள் கொட்டப்படும்.

இதனால் வெறுப்படைந்த வீட்டுக்காரர்கள் தமது வீட்டு மதிற் சுவரில் அல்லது வேலியில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் அவர்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.அந்த வாசகங்கள் வருமாறு…”இங்கே குப்பை போடுகிறவன் உன்னுடைய பெண்டாட்டியையும் கொண்டு வந்து போடு” என்று ஒரு வாசகம்.”இங்கே குப்பை போடுகிறவன் ஒரு மன நோயாளி” இது இரண்டாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டினால் உன்னைப் பேய் பிடிக்கும்” இது மூன்றாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டுகிறவன் ஒழுங்காகப் பிறக்காதவன்”…..என்று ஒரு வாசகம். இவைபோல பல்வேறு விகாரமான விபரீதமான அறிவிப்புகளைப் பார்க்க முடியும்.

ஒரு வீட்டுக்கார் தன்னுடைய வீட்டு வெளி மதிற் சுவரில் சுவாமிப் படங்களை ஒட்டி விட்டார்.ஆனால் சுவாமிப் படங்களுக்குக் கீழேயும் குப்பைகள் கொட்டப்பட்டன. குப்பைகளைக் கொட்டுபவர்கள் யார் என்று பார்த்தால் அதில் படித்தவர்கள் உண்டு,விவரம் தெரிந்தவர்கள் உண்டு.யாரும் பார்க்காத ஒரு நேரத்தில், யாரும் பார்க்காத விதமாக அவர்கள் குப்பையை அந்த இடத்தில் தட்டி விட்டுப் போவார்கள். அங்கே கமரா பொருத்தினாலும் அதை மீறிக் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் கமரா பொருத்துவதற்கும் காசு வேண்டுமே?

இவ்வாறான குப்பை கொட்டும் ஒரு சுகாதாரச் சூழலில் அல்லது தன்னுடைய குப்பையை மற்றவர்களுடைய முற்றத்தில் கொட்டும் ஒரு சீரழிந்த கலாச்சாரச் சூழலில், புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரதேச சபைகள் சந்தைச் சுகாதாரத்தையும் சந்தையில் விற்கப்படும் உணவுகளின் நுகர்வுத் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு புதிய வினைத்திறன் மிக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.சந்தைகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் இருந்துதான் ஒரு உள்ளூராட்சி சபையின் வெற்றிகள் அனைத்தும் தொடங்குகின்றன. சந்தைகளைச் சுத்தமாகப் பேணும் ஒர் உள்ளூராட்சி சபை தன் எல்லைக்குட்பட்ட கிராமங்களையும் சுத்தமாகப் பேணும். எனவே சந்தைச் சுகாதாரம் எனப்படுவது ஒரு குறிகாட்டி. புதிய உள்ளூராட்சி சபைகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?

உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்ட உடனடுத்த நாட்களிலேயே குப்பைகளைப் பிரித்தெடுத்து எரிக்கும் இடங்களில் முரண்பாடுகள் எழுந்தன.இணுவில்,கல்லுண்டாய் வெளி ஆகிய இடங்களில் குப்பைகள் ஏரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து முறைப்பாடுகள் எழுந்தன.

குப்பைகளை எரிப்பதற்குப் பதிலாக அவற்றை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் புதிய நவீன சிந்தனைகள் தேவை.உதாரணமாக ஸ்வீடன் நாடானது குப்பைகளை மீள் சுழற்சி செய்வதில் வெற்றியடைந்த நாடாகப் பார்க்கப்படுகிறது. அங்கே ஒரு கட்டத்தில் மீள் சுழற்சி செய்வதற்கு உள்ளூர்க் குப்பைகள் போதிய அளவு இருக்கவில்லை.அதனால் மீள் சுழற்சி மையங்கள் தொடர்ந்தும் இயங்குவதற்காக குப்பைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தில் நவீனமான, வினைத்திறன் மிக்க முடிவுகளை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நான் உரையாடிய பொழுது ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்னிடம் கேட்டார்,”அரசியலில் குப்பை கொட்டும் இந்தக் கட்சிகளிடம் பிரதேசசபைகளில் குப்பைகளை அகற்றுங்கள் என்று கேட்பது பொருத்தமானதா” என்று? பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதனை புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் விதத்தில் உள்ளூராட்சிப் பிரதேசங்களை சுத்தமானவைகளாகவும் சுகாதாரமானவைகளாகவும் பசுமைப் பூங்காக்களாகவும் மாற்ற முன் வர வேண்டும்.அன்னை தெரேசா கூறுவார்… “தொண்டு செய்வது என்பது வீட்டிலிருந்து தொடங்குகின்றது”என்று. அப்படித்தான் சுத்தமும் சுகாதாரமும் உள்ளூராட்சி சபைகளிலிருந்து தொடங்கட்டும்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!