பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையோர புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் சித்த மருத்துவரின் கணவர், மகள், தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்நத 3 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரங்குடி அருகே உள்ள தெற்கு கிரிவளை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் மகன் பாலபிரபு (28). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி(27). சித்த மருத்துவர். இவர்களுக்கு 2 வயதில் மகள் காவிகா.
இந்நிலையில், சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பாலபிரபு, கவுரி, குழந்தை காவிகா, கவுரியின் தந்தை கந்தசாமி ஆகியோர் நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை பாலபிரபு ஓட்டினார். கார், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே காலை 7.50 மணி அளவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் வந்த அனைவரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்து வந்த பாடாலூர் போலீஸார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், காருக்குள் பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை காவிகா உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த கவுரி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் இவர்களுடன் காரில் பயணித்த வளர்ப்பு நாய்க்கு ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.