சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான காவலாளி, பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது காரை வாகன தரிப்பிடத்தில் விடுமாறு கூறி,காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நிகிதா முறைப்பாடு அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் திகதி போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மதுரை அரச மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறையினர் டீNளுளு 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் அந்த வழக்கு பதிவில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டு வந்த நிலையில்,தலை முதல் கை, முதுகு, கால்கள் என அனைத்திலும் காயங்கள் இருந்தன.
மேலும், 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் கோயில் பின்புறம் மாட்டு தொழுவத்தில் வைத்து கம்பால் தாக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ மூலம் – தினத் தந்தி