நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களம் இறங்கினர்.
மார்க்ரம் 6 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த மார்ஷ் – ரிஷப் பந்த் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
மார்ஷ் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரவிந்திர ஜடேஜா சுழலில் போல்டாகி வெளியேறினார். ஆயுஷ் பதோனி 22 ரன்களும், அப்துல் சமத் 20 ரன்களும் எடுத்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு166 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
இன்றைய போட்டியில் அறிமுகமான சென்னை அணியின் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த ஷிவம் துபே – தோனி இணை அதிரடியாக ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது. 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபே 43 ரன்களுடனும், தோனி 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடந்த 5 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த சென்னை அணி இன்று வெற்றிப் பாதைக்கு திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!