சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் (வயது 27) என்ற இளைஞனை நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர், அவரை கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை காவல்துறை அதிகாரிகளான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதுடன், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, போலீசாருக்கு சரமாரி கேள்விகளை கேட்டு, கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். போலீசாரின் அத்துமீறிய தாக்குதலே இந்த மரணத்துக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வரும் தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது. இளைஞர் அஜித் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை என மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தலையில் கம்பை வைத்து தாக்கியதால் மூளையில் ரத்தக் கசிவும், உடலில் 50 வெளிப்புறக் காயங்கள் இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.