ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய்
அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளமை கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாளரை 10 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறு இன்று(26) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, வைற் சோல்ட் இலச்சனையிடப்பட்டபொதி செய்யப்பட்ட உப்பை நாடு மழுவதும் தடை செய்ததுடன் இதனை கைப்பற்றி அழிக்குமாறும் தாயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் ஏறாவூர் பிரதேசத்தில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட வைற் சோல்ட் என்ற இலச்சனை பதித்த உப்பு பைக்கற்றை சித்தாண்டி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சிவகாந்தன் கைப்பற்றி அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் ஒரு கிலோ உப்பில் 30 கிராம் அயடீன் இருக்க வேண்டும் ஆனால் குறித்த உப்பில் 84 கிராம் அயடீன் கலந்துள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இன்று(26) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.