சென்னை: அனல்மின் நிலையங்களில் வெளிவரும் உலர் சாம்பலை விற்பனை செய்ததன் மூலம் கடந்த ஆண்டு மின்வாரியத்துக்கு ரூ.241 கோடி வருவாய் கிடைத்தது.
தமிழக மின்வாரியத்துக்கு திருவள்ளூர், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு மின்னுற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக தினமும் சராசரியாக 60 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், 30 முதல் 40 சதவீதம் உலர் சாம்பல் வெளியேறுகிறது. மொத்த சாம்பலில் 20சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மீதம் உள்ளவை சிமெண்ட், கான்கிரீட் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த சாம்பல் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் சாம்பல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாம்பல் விற்பனை மூலமாக வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, 2024-25ம் ஆண்டு ரூ.241 கோடி வருவாய் கிடைத்தது. இது 2023-24ம் ஆண்டில் ரூ.218கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ.191 கோடியும் 2021-22 ம் ஆண்டில் ரூ.122 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.93 கோடியும் வருவாய் கிடைத்தது.