‘இந்தி படிக்கவில்லை எனில்…’ – நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் | Minister Periyakaruppan response to Nirmala Sitharaman

திருப்பத்தூர்: “இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்” என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியை படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்க கூட முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால், இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கக் கூடாது என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் முறையான கூட்டுறவு தேர்தல் நடைபெறவில்லை. முறைகேடாக தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காக தான் போலி உறுப்பினர்களை நீக்கிவிட்டு உண்மையானோரை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம் தான் நடத்த வேண்டும்.

கூட்டுறவுத் தேர்தலை நடத்துவதில் திமுக எந்தவித அச்சமும் இல்லை. கூட்டுறவுத் துறையில் பணியாளர்கள் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை அரசு கண்டுகொள்ளாமல் இல்லை. உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தான் அரசு செய்ய முடியும்.

தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறினார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து குற்றங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பது தவறு. பொதுமக்கள் பாராட்டும் வகையில் தமிழக பட்ஜெட்டாக உள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது 2026 தேர்தலுக்கு பிறகுதான் யாருக்கு பாதிப்பு என்று தெரியும். திமுகவை பொறுத்தவரை தேர்தல் களத்தில் என்றும் பின்வாங்கியது இல்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல திமுக. 75 ஆண்டுகளை கடந்த ஓர் அரசியல் இயக்கம். ஆனால் தற்போது கட்சியை ஆரம்பத்தவுடன் நான் தான் முதல்வர் என்று கூறிக் கொள்கின்றனர்” என்று அவர் கூறினார்.

மேலும் , அதிமுக குறித்து ஏன் விஜய் பேசவில்லை என்ற கேள்விக்கு, “இந்த கேள்வியை அதிமுக எதிர்க்கட்சித் தலைவரிடம் கேளுங்கள் அல்லது ஸ்டெப்னி செங்கோட்டையனிடம் கேளுங்கள் அல்லது டயர், டியூப் என அனைத்தும் கழற்றி வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம் கேளுங்கள்” என்று அதிமுக முன்னணி தலைவர்களை கே.ஆர்.பெரியகருப்பன் விமர்சித்துப் பேசினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!