இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்; பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா- இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதலாவது டெஸ்டில் வெற்றி வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது.

371 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்திய தரப்பில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 5 சதங்கள் விளாசப்பட்டன.

இதில் ரிஷப் பண்டின் இரு சதங்களும் அடங்கும்.

இத்தனை சதங்கள் அடித்தும் ஒரு அணி தோற்பது டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ‘பாஸ்பால்’ என்ற ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றக்கூடியவர்கள்.

அதாவது டெஸ்டையும் ஒரு நாள் கிரிக்கெட் போன்று வேகமாக ஆடுவார்கள்.

அதனால் 2 ஆவது இன்னிங்சில் குறைந்தது 400 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் தான் பாதுகாப்பான இலக்காக இருக்கும்.

இந்த யுக்தியை மனதில் வைத்து கொண்டு இந்திய வீரர்கள் ஆட வேண்டியது அவசியமாகும்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்க டெஸ்டில் வெற்றியை வேட்டையாடிய அதே உத்வேகத்துடன் களம் இறங்கும்.

சாதனையின் விளிம்பில் உள்ள அந்த அணியின் முன்னாள் தலைவர் ஜோ ரூட் இன்னும் 73 ஓட்டங்கள் எடுத்தால் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 3 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக துடுப்பாட்டத்துக்கு அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!