இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் புதன் கிழமை(19), அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் ,அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேல் நடத்தியுள்ள அதிர்ச்சியூட்டும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் அந் நாட்டு சியோனிச ஆட்சியின் அப்பட்டமான போர் நிறுத்த மீறலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.முஸ்லிம்கள் நோன்பு நோற்று வரும் புனித ரமழான் மாதத்தில் காசாவில் 400க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்ட குண்டுவெடிப்புகளை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்து, இரண்டு மாத கால போர்நிறுத்தத்தை மீறியுள்ளமை எங்களால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
காசா மற்றும் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் அமைதியை சீரழிக்கும் காரியங்களில் அறவே ஆர்வமில்லாதிருக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களையும் , இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
யெமன், சிரியா மற்றும் லெபனான் ஆகியவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதல்களின் மூலம் பொதுமக்களையும், பெண்களையும் ,சிறுவர்களையும் குழந்தைகளையும் காயப்படுத்துவதையும்,படுகொலை செய்வதையும்,
நிவாரணப் பணியாளர்களை நோக்கி இடைவிடாமல் தாக்குதல் தொடுப்பதையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகளைக் கூட சட்டத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகின்றது.
இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது மிகவும் கவலையளிக்கின்றது, இது இஸ்ரேலின் தண்டனையிலிருந்து தப்பிக்கும் செயல்களை தீவிரப்படுத்துகிறது. இது அமைதிக்கான பாதையில் , இராணுவ மோதல்களை அதிகரிப்பதோடு பிராந்தியத்தின் இயல்பான ஆற்றல் திறனை கடுமையாகக் குறைமதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறது.
இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கையாண்டுவரும் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவசரமாக கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கவும் அரபுத் தலைவர்களை நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்.
இஸ்ரேலிய சியோனிச ஆட்சி, சர்வதேச சட்டங்களை தொடர்ந்து மீறுவதையும், காசாவில் அது மேற்கொண்டுவருகின்ற மிலேச்சத்தனமான இனப்படுகொலை , தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் அழிவுச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இறைமையுள்ள அயல் நாடுகள் மீதான இஸ்ரேலின் அச்சுறுத்தல் ,அவற்றிற்கு ஏற்படுத்திவரும் பேரழிவு மற்றும் ஐ.நா. தீர்மானங்களை மீறிச் செயற்படுவது என்பவை சமமாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. சர்வதேச சட்டங்களை மீறிவருவதற்கும்,பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கும் இஸ்ரேலை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கம் பாதுகாப்புச் சபையிடம் முறையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.