ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கமைய 1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
கிளேசியர் பாதுகாப்பு என்பதே இம்முறை நீர் தினத்தின் தொனிப்பொருளாகும். சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமையாக இருப்பதுடன் உலகில் சுமார் 2.2 பில்லியனுக்கும் அதிகமானோர் சுத்தமான குடிநீரை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எல்லைகள் ஊடாக பயணிக்கும் நீரேந்து பகுதிகளிலிருந்தே தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதாக ஐக்கிய நாடுகளின் தரவுகளுக்கமைய தெரியவந்துள்ளது.
ஆறுகள், வாவிகள், உள்ளிட்ட நீர் வளங்களை அயல்நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 153 ஆகும். உலக வங்கியின் எதிர்வுகூறல்களுக்கமைய 2030ம் ஆண்டளவில் கேள்வி மற்றும் தற்போதுள்ள நீர் இருப்புக்கிடையில் பரஸ்பரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 62 வீதமானவர்களுக்கே சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறுகிறது. முறையற்ற அபிவிருத்தி மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களினால் நீரோந்து பகுதிகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளன.
இது இலங்கை முகம்கொடுக்கும் பாரிய சவாலாகும். இதேவேளை உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு செய்த நிகழ்வொன்று புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது குறித்த மாவட்டத்தின் நிலக்கீழ் நீர் வளங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் மக்களை தெளிவுபடுத்தும் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இம்முறை நீர் தின தொனிப்பொருளுக்கமைய சூழலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு செலுத்தும் வகையிலான ஒத்துழைப்பை வழங்குவது இலங்கைக்கான பொறுப்பாக அமைந்துள்ளது.