(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திங்கட்கிழமை (19) கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்காக 27 000 படை வீரர்கள் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையிலான நிகழ்வுகள் நாடளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு திங்கட்கிழமை (19) கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது.
பிரதான நிகழ்வு மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது . ஜனாதிபதியின் பிரதிநிதியாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) முன்னிலையில் நிகழ்வுகள் நடைபெறும்.
போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரால் நாடு தழுவிய சமூக நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
உயிரிழந்த ஆயுதப்படை வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அமைச்சு மற்றும் முப்படைகளின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அவர்களின் தேசபக்தி, தியாகம் மற்றும் கடமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எதிர்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களுக்கு தேசம் தனது ஆழ்ந்த நன்றியையும், அசைக்க முடியாத மரியாதையையும் வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்வு அமைகிறது.
நாட்டின் போர் வீரர்களை நினைவுகூருவதில் ஒற்றுமையுடன் நிற்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து மக்களையும் அழைக்கிறது. நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துகின்றோம் என்றார்.