மதுரை: “எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால், இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள்,” என்று அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு ஐந்தாம் பகுதி கழகத்தின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெத்தானியபுரத்தில் நடைபெற்றது. இதில் பா.வளர்மதி பேசுகையில், “வருகின்ற 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளாகிய நீங்கள்தான் கட்சியின் அஸ்திவாரமாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். பொதுச் செயலாளர் கே.பழனிசாமி இந்த இயக்கதுக்கு ராணுவத் தளபதியாக உள்ளார். நீங்கள் எல்லாம் ராணுவ சிப்பாய்களாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு இந்த இயக்கம் மாபெரும் சோதனையைக் கண்டது. இன்றைக்கு பொதுச் செயலாளராக இருக்கும் கே.பழனிசாமி மட்டும் இல்லை என்றால் இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள். இன்றைக்கு கே.பழனிசாமி மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி அதிமுகவை மாபெரும் வலிமையுள்ள இயக்கமாக உருவாக்கி உள்ளார்,” என்றார்.
இந்தக் கூட்டத்துக்கு பகுதிக் கழகச் செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமை தாங்கினார். வட்டகழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காளவாசல் பாண்டி, சிவபாண்டி, மூவேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சோலை இளவரசன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சக்தி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.