வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் விவாகரத்து என்ற வதந்திகளை நிராகரித்துள்ளார் அவரது மனைவி மிஷெல் ஒபாமா. பிரபல நடிகை நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடிய மிஷெல் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணுரிமை சார்ந்த சில விஷயங்களை அவர் முன்வைத்துப் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தது குறித்து மனம் திறந்த அவர், தனது முடிவுகளுக்கு தனது சொந்த நலனுக்கு முன்னுரிமை அளித்தது மட்டுமே காரணம் என்றும் விவரித்துள்ளார்.
மிஷெல் கூறியதாவது: என்னுடைய நாட்களை நானே தீர்மானிக்கும் வாய்ப்பு இப்போது எனக்கு உள்ளது. இதுபோன்ற முடிவுகளை நான் பல வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த சுதந்திரத்தை நான் அப்போது எடுத்துக் கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு அவர்களுக்கான வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டி இருந்தது. அதனால் அப்படி ஒரு முடிவை அப்போது நான் எடுக்காமல் இருந்தேன் எனலாம். ஆனால் அதுவும்கூட ஒரு சாக்காகவே இருக்கும்.
இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்று பிறர் விரும்புவதை தேர்வு செய்வதற்குப் பதிலாக எனக்கு எது சிறந்ததோ அதை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். பெண்களாகிய நாம் போராடுவதும் இதற்காகத்தான். நான் எனக்கான விருப்பத்தை தேர்வு செய்துள்ளேன் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நானும் எனது கணவரும் விவாகரத்து செய்யவிருக்கிறோம் என கருதப்படும் நிலையே இங்கே உள்ளது.
இப்போதும் கூட ஒரு பெண் தனக்காக சில முடிவுகளை எடுக்க முடியாது இல்லையா? நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த சமூகத்தின் பொதுபுத்தியில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் இருந்து நமது முடிவு மாறுபட்டிருந்தால், அது எதிர்மறையான பயங்கரமான விஷயங்களாக கருத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்ச்சி என உயர் மட்ட அரசியல் நிகழ்வுகளில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது மனைவி மிஷெல் ஒபாமா இல்லாமல் தனியாக பங்கேற்றார். அது இந்த தம்பதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற வதந்தியை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.