சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 12) ஒரே நாளில் இரு முறை சரிந்தது. பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை ஆனது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ரூ.71,040-க்கு விற்பனையானது. இன்று மாலையில் மேலும் குறைந்தது, பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.295 குறைந்து 8,750-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1.10 லட்சம் ரூபாயாகவும் இருந்தது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. மார்ச் 13-ம் தேதி 64,960 ஆகவும், ஏப்.1-ம் தேதி ரூ.68,080 ஆகவும் இருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை அறிவிப்பு, ஈரான் நாட்டின் மீதான போர் அச்சுறுத்தல், அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் ஆகியவற்றால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.
குறிப்பாக, கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. தற்போது ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் டிராய் அவுன்ஸ் விலை சரிவு, அமெரிக்கா டாலர் மதிப்பு குறைவு ஆகிய காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது என்றும், வரும் நாட்களில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம் குறைந்து வருவதால், சர்வதேச பங்குச் சந்தைகள் வெகுவாக மீண்டு வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் பார்வை இப்போது பங்குச் சந்தை பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.