கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார்.

தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தணிக்க, கச்சத்தீவைப் பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று தீர்மானம் கூறுகிறது.

“மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசை இந்த மாண்புமிகு அவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது மீனவர்கள் அனைவரையும் அவர்களது படகுகளுடன் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விடுவிக்க” இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

அண்மைய மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கடந்த பெப்ரவரியில் 32 சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதையும், ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் தொடர்ந்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடங்கினர்.

இலங்கையின் வடக்கு மன்னார் பகுதிக்கு அருகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கைதுகள் நடந்தன.

இது கடலோர சமூகத்தினரிடையே பரவலான போராட்டங்களைத் தூண்டியது.

Katchatheevu row: Island history, controversy and handover to Sri Lanka | India News - Business Standard

இதேவேளை, இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் மார்ச் 27 அன்று கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நிலைமைக்கு மூல காரணம்.

1974 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரைந்தபோது இந்தப் பிரச்சினை தொடங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!