0
புதுடெல்ல: கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேராவை ஈடி வேட்டையாடி வருகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா (56). அவர் மீது அமலாக்கத்துறை சார்பில் நில மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 சொத்துகளும் முடக்கப்பட்டு குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,‘‘என்னுடைய மைத்துனரை கடந்த 10 வருடங்களாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. இந்த புதிய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும். ராபர்ட், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் எப்படிப்பட்ட துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். அந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். இறுதியில் உண்மை வெல்லும்’ என தெரிவித்துள்ளார்.