ஜிம்பாப்வே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான கிறிஸ்டி கோவென்ட்ரி (Kirsty Coventry) சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 144 ஆவது அமர்வின் போது இந்தத் தேர்தல் நடைபெற்றது.
போட்டியில் கோவென்ட்ரி ஒரு விருப்பமானவராகக் கருதப்பட்டாலும், அவரது வெற்றியின் வித்தியாசம் பல பார்வையாளர்களை திகைக்க வைத்தது.
உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ மற்றும் IOC இன் துணைத் தலைவர் ஜுவான் அன்டோனியோ சமரஞ்ச் ஜூனியர் உள்ளிட்ட ஏழு வலுவான வேட்பாளர்களைக் கொண்ட முதல் சுற்று வாக்குகளில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.
கோவென்ட்ரியின் இந்த வெற்றியானது அவரை குறித்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாகவும், முதல் ஆப்பிரிக்கராகவும் ஆக்குகிறது.
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமான பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஒலிம்பிக்கை மேலும் திறந்தவெளியாக மாற்றுவதற்கும், உலகம் முழுவதும் பாலங்களை உருவாக்குவதற்கும் தனது முன்னுரிமைகளை 41 வயதான அவர் கோடிட்டுக் காட்டினார்.
2028 கோடைகால ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருப்பதும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தின் சொல்லாட்சிகள் மற்றும் கொள்கைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையும் இருப்பதால், IOC க்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாலம் குறித்து நிருபர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கோவென்ட்ரி , விரைவில் வெள்ளை மாளிகை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டுகளில் திருநங்கைப் பெண்கள் மீதான முழுமையான தடையை ஆதரிப்பதாகவும் கோவென்ட்ரி கடந்த வாரம் பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.