சிரியாவின் இராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள இராணுவ தலைமையகம் இன்று (ஜூலை 16) வான் வழியாக குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் துரூஸ் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேடா நகரில் சிரியா இராணுவத்துக்கும் துரூஸ் இன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சண்டை தீவிரமடைந்துள்ளது.
துரூஸ் இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஸ்வேய்தா மாகாணத்தில் அந்த இனத்தைச் சோ்ந்த ஆயுதக் குழுவினருக்கும், சுன்னி பிரிவு பெதூயின் ஆயுதக் குழுவினருக்கும் இடையே தொடா்ந்து மோதல் நிலவி வந்தது.
இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொள்வது, எதிா்க் குழு உறுப்பினா்களைக் கடத்திச் செல்வது ஆகிய சம்பவங்கள் தொடா்ந்தன. அதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்ற அரசுப் படைகள் துரூஸ் ஆயுதக் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் படையினா் ஸ்வேய்தா நகரில் அரசுப் படைகளின் பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
இதனிடையே, சிரியா இராணுவத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதால் சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. துரூஸ் இன மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல்களை இஸ்ரேல் கருதுவதாகவும் இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.