சுகாதாரத் துறையில் லஞ்ச ஊழலில் ஈடுபடாதவர்களை அரசாங்கம் நிச்சயம் பாதுகாக்கும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நண்பகல் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் அமைச்சர் கௌரவிக்கப்பட்டார்
இதனையடுத்து மாவட்டத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .
இந்நிகழ்வில் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது முக்கிய தேவைகள் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது ” எதிர்வரும் காலத்தில் கட்டம் கட்டமாக அவை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார். அத்துடன் கிழக்கு மாகாண பிராந்திய வைத்தியசாலைகளின் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது மாகாண சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்கள் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.