– இராஜதுரை ஹஷான் –
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மாத்திரம் கைது செய்யப்படுவதாக குறிப்பிடுவது தவறானது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை சமூகமயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பயங்கரவாத தடைச்சட்டத்துடனான கைது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 09 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பட்டமளிப்பு விழாவுக்கு கூட செல்ல முடியாத நிலைமை இந்த இளைஞனுக்கு ஏற்பட்டது.
இந்த இளைஞன் தொடர்பில் சாட்சியங்கள் இல்லை, தற்போது விடுவிக்க முடியும் என்று தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்துள்ளார்.இந்த இளைஞனுக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூறுவது,?
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க துப்பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்.இருப்பினும் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.ஏனெனில் அவர் முஹம்மது துமிந்த திசாநாயக்க அல்லவே,
இந்த நாட்டில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு மாத்திரமா பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பேசிய உங்களின் அரசாங்கம் தொடர்ந்து இந்த சட்டத்தை செயற்படுத்துவது நியாயமானதா,?