செந்தில் பாலாஜிக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு – ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு | Supreme Court closed Senthil Balaji bail cancellation case

புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார்.

இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது அவர் அமைச்சராக பதவியேற்பதற்காக அல்ல. மெரிட் அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்.28) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “செந்தில் பாலாஜி இந்த வழக்கு விசாரணை முடியும் வரை எந்தவொரு பதவியையும் வகிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், “செந்தில் பாலாஜி போன்றவர்கள் அதிகாரம் இல்லாமல், வெகு நாட்கள் இருக்க முடியாது. அவரது முந்தைய நடவடிக்கைகளின்படி, அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் அவர் எந்தவொரு பதவியையும் வகிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறோம்,” என்று வாதிடப்பட்டது. அதேபோல், அமலாக்கத் துறை தரப்பிலும், “இவ்வழக்கு விசாரணை முடியும் வரை, செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது வேறு அரசு பதவிகளோ அவருக்கு வழங்கக் கூடாது,” என உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ‘இந்த வழக்கின் விசாரணை முடிய இன்னும் 15 வருடங்கள் ஆகலாம். அதுவரை செந்தில் பாலாஜி எந்தவொரு பதவியையும் வகிக்கக் கூடாது என்று நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வேறு எந்த புதிய நிபந்தனைகளையும் விதிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!