சென்னை துறைமுக வடக்கு பகுதியில் ரூ.8,000 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டம் | Plans to build a new terminal at northern part of Chennai Port

சென்னை: சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய மல்டி மாடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தென்னிந்திய கப்பல் போக்குவரத்து 6-வது மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் மாநாட்டை தொடங்கி வைத்து, ‘மாநில தளவாடங்களின் நிலை மற்றும் துறை ரீதியான டிஜிட்டல் மாற்றம்’ குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

நம் துறைமுகங்களில் முன்பு வெளிநாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (விடிஎம்எஸ்) பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடி தயாரித்த விடிஎம்எஸ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சென்னை, காமராஜர், தூத்துக்குடி துறைமுகங்களில் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் வெளியேற்றத்தை கணிசமாக குறைக்கும் வகையில் பசுமை இழுவைப் படகுகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவர உள்ளோம். நெதர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்டு வியட்நாமில் தயாரிக்கப்பட்ட இந்த படகுகள், அபுதாபி வழியாக சென்னை துறைமுகத்துக்கு வரவுள்ளன. பசுமை இழுவைப் படகுகளை பயன்படுத்தும்போது நல்ல மாற்றம் ஏற்படும்.

துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் டீசல் உபகரணங்களுக்கு பதிலாக மின் உபகரணங்களை பயன்படுத்தவும் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய கேப்சைஸ் கப்பல்களைக் கையாளும் வகையில் ரூ.500 கோடியில் காமராஜர் துறைமுகத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

துறைமுகம் – மதுரவாயல் சாலை: இதில், தற்போது நடைபெற்று வரும் முதல்கட்ட பணிகள் அடுத்த 7 மாதங்களில் நிறைவடையவுள்ளன. துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட சாலை மேம்பாலம் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்க உள்ளோம். இதுவரை துறைமுகத் தோணிகளிலும், பாதுகாப்பு கப்பல்களிலும் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஓபிஎஸ் (கடலோர மின்சாரம்) இந்தியாவில் முதல்முறையாக காமராஜர் துறைமுகத்தில் வர்த்தக கப்பல்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

அதேபோல் சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கிமீ தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருகிறது. இது ரூ.8 ஆயிரம் கோடியில் அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய முனையத்தில், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. இந்த புதிய கன்டெய்னர் துறைமுகம் பயன்பாட்டுக்கு வரும்போது கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் மூத்த துணைத் தலைவர் சிவசங்கர். தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் விநியோகப் பிரிவு மேலாண்மை தலைவர் நவீன் பிரகாஷ், தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குநர் பானா பிஹாரி நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!