செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

 

அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரியான கணக்குத் தெரியாது.புத்த பகவானைத் தவிர.

இதுவரை 23 புதை குழிகள் கிண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆகப் பிந்தியதுதான் செம்மணி. செம்மணிக்கு ஓர் இனப் பரிமாணம் உண்டு. அதனால்தான் அது இப்பொழுது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும்பொழுது செம்மணி கிண்டப்பட்டமை என்பது மற்றொரு முக்கியத்துவம். அதனால் அதற்கு உலகப் பிரசித்தம் கிடைத்திருக்கிறது. மூன்றாவது, முக்கியமானது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமக்குரிய அரசியல் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் செம்மணியை ஒரு விவகாரமாக மாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் உண்டு.

இதனால் செம்மணி விவகாரம் முதலாவதாக தமிழ் மக்களை தேசிய உணர்வோடு ஒருங்கிணைத்து வருகிறது.இரண்டாவதாக இனப்பிரச்சினை மீதான சர்வதேசக் கவனத்தை ஈர்த்து வருகிறது.அனைத்துலக ஊடகங்கள் அது தொடர்பாக செய்திகளை வெளியிடத் தொடக்கி விட்டன.புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதைப் பேசு பொருளாக்கியிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செம்மணி அகழ்வுக்கு ஒரு கோடியே இருபது லட்ஷம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தேவையான நிதி வழங்கப்படுமா? அதோடு அணையா விளக்கு போராட்டமும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்பதுபோல இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையை;அனைத்துலக சமூகத்தின் நிபுணத்துவ உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா? குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் பின்னரான அரசியற் சூழலில் தேசிய மக்கள் சக்தி செம்மணி தொடர்பில் எப்படி நடந்து கொள்ளும்?

முதலாவதாக அது,தேசிய மக்கள் சக்தியானது உண்மையை வெளியே கொண்டு வருவதில் எந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் என்பதில் தங்கியிருக்கிறது. இரண்டாவதாக அது,அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் உண்மையானது தென்னிலங்கையில் இனவாதத்தை புதிய கட்டத்துக்கு உயிர்ப்பிக்குமா இல்லையா என்ற விடயத்திலும் தங்கியிருக்கிறது .

முதலாவது விடயத்தை நான் ஏற்கனவே இப்பகுதியில் எழுதியிருக்கிறேன். தனது இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சொந்தத் தோழர்களுக்காக ஜேவிபி நீதி கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான இளையோர் அவ்வாறு கொல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள்.ஜேவிபி அவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டால் எந்தப் படைத் தரப்பை அவர்கள் இறுதிக் கட்டப் போரில் யுத்த வெற்றி நாயகர்களாகக் கட்டியெழுப்பினார்களோ அதே படைத்தரப்பை அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி வரும். அவ்வாறு செய்வதற்கு ஜேவிபி தயாரில்லை. நாட்டின் யுத்த வெற்றி நாயகர்களை யுத்தக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஜேவிபி தயாராக இருக்காது.அதனால்தான் கடந்த தசாப்தங்களில் கிண்டப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் விடயத்தில் ஜேவிபி உண்மையை வெளியே கொண்டு வரத் தேவையான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

உதாரணமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தளையில் ஒரு பெரிய மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் 2012. மாத்தளை பொது ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது அங்கே எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்பிரதேசம் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கிண்டப்பட்டது.அதன்போது மொத்தம் 158 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் அதற்கு எதிராக அனுரகுமார குரல் எழுப்பியதாக ஒரு ஞாபகம்.அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.ஆனால் அது ஒரு விவகாரமாகத் தொடர்ந்து பேசப்படவில்லை. கிண்டப்பட்ட புதை குழிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டு வரப்படவில்லை.

அவற்றை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி உரிய தீவிரத்தோடு போராடவில்லை. அக்காலகட்டத்தில் மதிப்புக்குரிய மனித உரிமை ஆர்வலர் ஆகிய சுனிலா அபயசேகர, மாத்தளை புதை குழி தொடர்பாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறுகிறார்,”இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் தம் உறவினர்களின் எச்சங்களைத் தேடி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறு இல்லை.” என்ற பொருள்படக் கூறிக் கவலைப்பட்டிருந்தார்.அதற்குக் காரணம் என்ன? அந்தப் புதை குழிகளுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய அமைப்பு அப்பொழுது போராடவில்லை என்பதுதான்.

இவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட தன் தோழர்களுக்காக;கொன்று எரிக்கப்பட்ட;கொன்று கடலில் வீசப்பட்ட தன் தோழர்களுக்காக, நீதி கேட்காத ஓரமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்பிபி இனவாதத்தின் பக்கம்தான் நிற்கும். இது முதலாவது.

இரண்டாவது,செம்மணி விவகாரம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா இல்லையா என்பது. ஏற்கனவே நாம் பார்த்தபடி இனவாதத்தின் பக்கம் நிற்கும் என்பிபி தனது படை வீரர்களை காட்டி கொடுக்காது. அவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்தாது.எனினும் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் ஐநாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக,என்பிபி ஒரு தோற்றத்துக்காவது விசாரணைகளை முன்னெடுப்பது போல காட்டிக் கொள்ளும். ஆனால் அதற்கும் அடிப்படை வரையறைகள் இருக்கும்.

ஏற்கனவே கடந்த ஐநா கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் அனைத்துலகப் பொறிமுறையை நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் அனைத்துலக உதவியை கேட்பது; ஐநாவின் மேற்பார்வை போன்ற விடயங்களுக்கெல்லாம் என்பிபி ஒத்துக்கொள்ளாது. மாறாக உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கூடாக விவகாரங்களைக் கையாள முற்படக் கூடும். ஆனால் அங்கேயும் வரையறைகள் இருக்கும்.தமிழ் மக்களுக்கு நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளப்போய், அதன் விளைவாக, தெற்கில் இனவாதிகளுக்கு புதிய எரிபொருளை வழங்க என்பிபி விரும்பாது. செம்மணி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கும்போது வெளிவரக்கூடிய உண்மைகள் படைத்தரப்புக்குப் பாதகமாக மாறுமாக இருந்தால், தென்னிலங்கையில் இனவாதிகள் புதிய பலத்துடன் மேல் எழுவார்கள்.தமது யுத்த வெற்றி நாயகர்களை என்பிபி காட்டிக் கொடுக்கப் பாக்குறது என்று கூச்சலிடுவார்கள்.இது எதிர்காலத்தில் தனது தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று என்பிபி பயப்படுமாக இருந்தால் செம்மணி தொடர்பான விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது.

ஏற்கனவே யுத்த வெற்றி நாளைக் கொண்டாடும் பொழுது அதில் யுத்த வெற்றி நாயகர்களை விழிக்கும் பொழுது அனுர பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதிகள் மத்தியில் விமர்சனங்கள் உண்டு. இத்தகையதோர் பின்னணியில், படைத் தரப்பை விசாரணை செய்வதற்கு என்.பி.பி. முன்வராது.

என்.பி.பி.க்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது புரட்சிகரமான பெரும்பான்மை அல்லவென்று நான் அடிக்கடி இப்பகுதியில் எழுதியிருக்கிறேன்.அது பெருமளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால்,தேசிய மக்கள் சக்தியானது சிங்கள பௌத்த மனோ நிலையின் கைதிதான்.எனவே அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செம்மணி அகழ்வாராச்சியை அனுமதிக்க மாட்டார்கள்.

அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்த பொழுது, சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதுதொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு தொகுக்கப்பட்ட பார்வை உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையையொட்டி விமல் வீரவன்ச வழமை போல இனவாதத்தைக் கக்கினார். ஆனால் அவரைவிட வேறு யாரும் அது தொடர்பாக பெரிய அளவில் கதைத்ததாகத் தெரியவில்லை. அதனை எப்படிப் பார்ப்பது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னய அரசாங்கங்களின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு தொகுதி முன்னாள் அரசியல் பிரதானிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளின் மீது தென்னிலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பவைகளாகக் காணப்படுகின்றன. அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்திருக்கின்றன.ஐநா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத்தான் அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இது என்பிபி அரசாங்கத்துக்குச் சாதகமானது, என்றாலும் அந்த விசாரணைகளின் முடிவில் வெளிப்படும் உண்மைகள் யுத்த வெற்றி நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமாக இருந்தால்,அதை என்பிபி அனுமதிக்காது. அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் ஆகப் பிந்திய விவகாரமாக செம்மணி காணப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply