நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்- பாத்திமாமேரி தம்பதிக்கு ஜூன் 30-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்திம் இரவு வீட்டில் குழந்தைக்கு பாத்திமா மேரி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென குழந்தையின் உடலில் எவ்வித அசைவும் இல்லாததுடன், உடல் குளிர்ச்சி அடைந்ததை பாத்திமா மேரி உணர்ந்தார். இதையடுத்து, உடனடியாக குழந்தையை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவர் அறிவுரை: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத் துறை உதவி பேராசிரியரான மருத்துவர் முகமது நாசர் கூறியது: குழந்தைகளுக்கு தாய்ப்பால், குறிப்பாக முதலில் வரக்கூடிய சீம்பால் கொடுப்பது மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர், தேன் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தையை சரியானபடி அமர்த்தி தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
படுத்துக்கொண்டே பால் கொடுக்கக் கூடாது. அமர்ந்துதான் கொடுக்க வேண்டும். பால் கொடுத்தவுடன் குழந்தைகளை கீழே போடுவதை தவிர்த்துவிட்டு, தோளில் போட்டு தட்டிக்கொடுக்க வேண்டும். மேலும், சில குழந்தைகள் தாடை அல்லது அன்னத்தில் பிளவு பிரச்சினையுடன் பிறந்திருந்தாலும், பாலை உடனடியாக விழுங்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
இதுபோன்ற குழந்தைகளுக்கு மிக கவனமுடன் பால் புகட்ட வேண்டும். குழந்தை சரியாக பால் குடிக்காவிட்டாலோ, மார்பக காம்புகளில் வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். வீட்டு வைத்திய முறையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.