”திமுகவின் அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி” – ஆசிரியர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம் | Teachers Arrested; DMK’s Oppression will Definitely be Taught Lesson!: Anbumani Condemns

சென்னை: “அதிகார மமதையில் ஆட்டம் போடும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டப்போவது உறுதி” என்று ஆசிரியர்கள் கைது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று எட்டாவது நாளாக போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கின்றனர். வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான உரிமைகளைக் கேட்டு அறவழியில் போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அளவுக்கு, அவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை. தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ரூ.5,000 மாத ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 13 ஆண்டுகளில் அவர்களின் ஊதியம் ரூ.7,500 உயர்த்தப்பட்டதைத் தவிர அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-ம் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் தான் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி தொடங்கி அவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் நலனில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது என்றால், ஆட்சியாளர்களுக்கு அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதாகத்தான் தோன்றுகிறது.

தமிழக வரலாற்றில் அடக்குமுறைகள் மூலம் எந்த போராட்டத்தையும் ஒடுக்க முடிந்ததில்லை. நியாயமான கோரிக்கைகளை மறுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதில்லை. எனவே, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை விடுத்து பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதை செய்ய மறுத்தால் அதிகார மமதையில் ஆட்டம் போடும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டப்போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply