திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு, புதன்கிழமை திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயிலுக்கு, கடந்த 7-ம் தேதி, தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான சென்னை- ஜவஹர்லால் நகரைச் சேர்ந்த கவுதம்(33), தன் குடும்பத்துடன் காரில் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, கவுதம் வீட்டுக்கு திரும்ப, கோயில் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு சென்ற போது, அவர் கையில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க காப்பு தவற விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கவுதம் கோயில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையே, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள கோணலம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான பவித்ரா (12), ரேணுகா (8) ஆகிய இரு சிறுமிகள், வாகன நிறுத்துமிடத்தில் கிடந்த கவுதமின் தங்க காப்பை கண்டெடுத்தனர். அவர்கள், அந்த தங்க காப்பை, புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரிடம் வழங்கினர்.
இதையடுத்து, போலீஸார் சிறுமிகள் அளித்த தங்க காப்பை, அதனை தவற விட்ட கவுதமிடம் ஒப்படைத்தனர். ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகள், கோயில் வாகன நிறுத்துமிடத்தில் கண்டெடுத்த தங்க காப்பை போலீஸாரிடம் ஒப்படைத்ததை அறிந்த பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிறுமிகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், புதன்கிழமை அன்று சிறுமிகளை, அவர்களின் பெற்றோருடன் தன் அலுவலகத்துக்கு வரவழைத்து, சிறுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தும், பரிசு பொருட்கள் அளித்தும் பாராட்டினார். .