“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர்.
அடிக்கடி ஆர்ப்பாட்டமில்லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்துவதாக உடன்பிறப்புகள் காதைக்கடிக்கிறார்கள்.
பொள்ளாச்சியை தலைநகராகக் கொண்டு மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அதேபோல், பழநியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக-வும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, பழநி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் தொகுதிகளை உள்ளடக்கி பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி மெனக்கிடுவதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட திமுக சீனியர்கள் சிலர், “திண்டுக்கல் மாவட்ட திமுக-வில் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அசைக்கமுடியாக சக்தியாக இருக்கிறார்கள். ஐபி-யை மீறி அங்கு சக்கரபாணியால் பெரிதாக எதையும் செய்துவிடமுடியாது. அதனால், பழநியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கினால் மாவட்ட அமைச்சராக தான் மட்டுமே அதிகாரத்துடன் வலம்வரலாம் என நினைக்கிறார் சக்கரபாணி.
உள்ளுக்குள் இப்படியொரு திட்டம் இருப்பது கூட தவறில்லை. ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்குளத்தையும், உடுமலையையும் தென்மாவட்ட வாழ்வியல் சாயலைக் கொண்ட பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளையும் உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்குவது சிக்கலை உண்டாக்கும்.
மக்களவைத் தேர்தலில் தனது விசுவாசியான ஈஸ்வரசாமியை பொள்ளாச்சி தொகுதியில் நிற்கவைத்து அவரை ஜெயிக்கவும் வைத்தவர் சக்கரபாணி. அதேபோல் 2026-ல், தற்போது அதிமுக வசம் உள்ள மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளை திமுக-வுக்கு வசமாக்கிக் காட்டுகிறேன் என்று தலைமையில் சொல்லித்தான் பழநி மாவட்டப் பிரிப்புக்கு சக்கரபாணி அடிபோட்டதாக சொல்கிறார்கள்.
பழநி மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகள் சேர்க்கப்படலாம் என்ற செய்தியை திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர்களும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் அவ்வளவாய் ரசிக்கவில்லை என்கிறார்கள். தங்களுக்கான ஆளுகை எல்லை குறைந்து போகும் என்பது இவர்களது கவலை.
அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிலும் இந்த பிரிவினையை விரும்பவில்லை என்கிறார்கள். ஆனால், மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளில் உள்ள சக்கரபாணியின் ஆதரவாளர்கள் எம்எல்ஏ, எம்பி, மாவட்டச் செயலாளர் கனவில் புதிய மாவட்டத்தை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணியிடம் பேசினோம். “பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது என்பது முதல்வரின் முடிவு. அது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். புதிய மாவட்டம் அறிவிப்பு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக முதல்வர் நியமித்தார்.
அதனால் ஈஸ்வரசாமியை வெற்றி பெற வைத்தோம். மாவட்ட பிரிவினை தொடர்பாக நான் எந்த முனைப்பும் காட்டவில்லை. பலரும் பல விதமான யூகங்களைச் சொல்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாகி விடும்” என்றார். இதனிடையே, பொள்ளாச்சியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதல்வருக்கு கடிதம் அளித்திருக்கிறார் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ-வான அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்.